தும்பிக்கை துண்டான யானை ரிவல்டோவை முதுமலை முகாமில் சேர்க்க வனத்துறை நடவடிக்கை!

0 121225
முதுமலை நோக்கி அழைத்து செல்லப்படும் ரிவல்டோ யானை

காட்டு யானைக்கு தீ வைத்துக் கொன்ற ரிசார்ட் உரிமையாளர்களை பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டோம். ஆனால், பன்றிக்கு வைத்த பொறியில் சிக்கியதால் தும்பிக்கை துண்டான யானைக்கு பெற்ற பிள்ளையைப் போல உணவு ஊட்டி பாதுகாத்த ரிசார்ட் உரிமையாளர் பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். யானை மனித மோதலுக்கு மத்தியில் யானை- மனிதனுக்கிடையே மலர்ந்த அழகான நட்பு பற்றிய செய்தி இது.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் சீகூர் என்ற கிராமத்துக்குள் சில ஆண்டுகளுக்கு முன், தும்பிக்கையில் காயம்பட்ட நிலையில் காட்டு யானை ஒன்று புகுந்தது. யானையின் தும்பிக்கையில் பெரிய காயம் இருந்தது. இதன் காரணமாக யானையால் சரியாக உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்தது. சீகூரில் ரிசார்ட் நடத்தி வந்த மார்க் என்பவர், தும்பிக்கையில் காயத்துடன் அலையும் யானையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தும்பிக்கைதான் யானையின் பலம் என்பார்கள். ஆனால், தும்பிக்கையின் முன் பகுதி பன்றியைப் பிடிக்க வைத்த பொறியில் சிக்கியதால் துண்டாகி இருந்தது.

ஆனால், காட்டு யானையைக் கண்டு சற்றும் பயப்படாத மார்க் மயங்கிய நிலையிலிருந்த யானைக்கு உணவு வழங்கி, அதன் காயத்துக்கு மருந்தும் போட்டு வந்தார். நாளடைவில், தும்பிக்கையின் முனையிலிருந்த புண் குணமாகி விட்டாலும் யானையால், சகஜமாக புற்கள் மற்றும் தழைகளைப் பறித்துப் பிற யானைகளைப் போல உண்ண முடியாத நிலை இருந்தது. கொஞ்சம் கஷ்டப்பட்டே அதனால், இலை தழைகளை பறித்து உண்ண முடியும். இதனால், தனக்கு பசி எடுக்கும் போது மார்க்கிடத்தில் வரும், அவரும் தன்னால் முடிந்த உணவை யானைக்குக் கொடுப்பார். தனக்குப் பிடித்த பிரபல பிரேசில் கால்பந்து வீரர் ரிவல்டோவின் பெயரை இந்த யானைக்கு சூட்டி மார்க் அழைத்து வந்தார். ரிவல்டோவின் தந்தத்தைப் பிடித்து தொங்குமளவுக்கு மார்க்குக்கும் யானைக்கும் நெருக்கம் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.image

நாளடைவில் ரிவல்டோ யானை மசினகுடி, கக்கநல்லா, மாவனல்லா பகுதிகளில் பிரபலமாகி விட்டது. 'ரிவல்டோ அங்க நின்னா இந்த பழத்த அதுக்கு கொடுத்துட்டு போடானு' கிராமங்களைச் சேர்ந்த தாயார்கள் சொல்லுமளவுக்கு ரிவல்டோ பிரபலமாகியிருந்தது. இந்த நிலையில், திடீரென்று உடல் நிலை பாதித்து மார்க் இறந்து போய் விட்டார். தன் அன்புக்குரிய நண்பர் இறந்து விட்டது குறித்து அறியாத ரிவல்டோ யானை, தினமும் அந்த ரிசார்ட்டுக்கு வந்து மார்க்கை தேடிப் பார்த்து விட்டு மீண்டும் சென்று விடும். இந்த காட்சியைக் கண்டு மார்க்கின் நண்பர்கள் வேதனையடைந்தனர். மார்க்கின் மறைவுக்கு பிறகும் சீகூர் சுற்று வாட்டாரத்தில் ரிவல்டோ வாழ்ந்து வந்தது.

மார்க்கின் மறைவுக்கு பிறகு பந்தன் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த வன ஊழியரை ரிவல்டோவின் பாதுகாப்புக்காக வனத்துறை நியமித்திருந்தது. இந்த நிலையில், மசினகுடியில் யானை தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததால், ரிவல்டோவை முதுமலை தெப்பக்காடு முகாமில் வைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து, 5 மணி நேரமாக ரிவல்டோவை தேடிய வனத்துறை அதிகாரிகள் அதற்கு பழங்களை கொடுத்து அன்பாக சாலை வழியாக முதுமலை தெப்பக்காட்டு முகாமுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments