தூக்கமில்லாமல் மணிக்கணக்கில் ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவன்... மயங்கி விழுந்து பரிதாப பலி!
புதுச்சேரியில் மணிக்கணக்கில் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டிருந்த 16 வயது பள்ளி மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அருகேயுள்ள மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். பச்சையப்பனின் இளைய மகன் தர்ஷன் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்த போது அதிக நேரம் செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடத் தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் மொபைல் விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தூக்கமில்லாமல் மணிக்கணக்கில் விளையாடியுள்ளான்.
இந்த நிலையில், திங்கள் கிழமையன்று வீட்டின் அறையில் அமர்ந்துகொண்டு மொபைல் போனில் ஃபயர்வால் எனும் ஆன்லைன் விளையாட்டை நீண்ட நேரமாக விளையாடிக் கொண்டிருந்தார். காதில் ஹெட் செட் வைத்துக்கொண்டு அதிக சத்தத்துடன் விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக பெற்றோர் தர்ஷனை தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற தர்ஷன் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஜிப்மர் மருத்துவமனையில் தர்ஷனைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகாரின் அடிப்படையில் வில்லியனூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தொடர்ந்து பலமணி நேரம் மொபைல் போனில் விளையாடியதால் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments