அரசு பேருந்தில் கிடைத்த தங்க கொலுசை காவலரிடம் ஒப்படைத்த தங்கப் பெண்மணிக்கு பொதுமக்கள் பாராட்டு

0 6048

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அடுத்த சாமி விளையை சேர்ந்தவர் புஷ்பராணி.  இவர் நேற்று மாலை அழகிய மண்டபத்தில் இருந்து களியக்காவிளையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி உள்ளார்.

அப்போது பேருந்துக்குள் ஒரு தங்க கொலுசு கிடந்ததை பார்த்துள்ளார். உடனே அவற்றை எடுத்து பத்திரப்படுத்தியுள்ளார். பேருந்தைவிட்டு இறங்கியதும் களியக்காவிளை காவல் நிலையத்தில் அந்த கொலுசை புஷ்பராணி ஒப்படைத்துள்ளார்.

அந்த கொலுசுக்கு உரியவர் மற்றொரு கால் கொலுசை காட்டி பெற்றுக் கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.அதன்படி நேற்று நெய்யூர் ஊற்றுக்குழியை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு சென்று, அந்த தங்க கொலுசு என்னுடையதுதான் என்று சொல்லி, அவற்றை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார்.

ஆனால் காவலர்கள்  இன்னொரு காலில் மாட்டியிருந்த தங்க கொலுசை காட்டுமாறு கஸ்தூரியிடம் கேட்டுள்ளனர். உடனே கஸ்தூரி தன்னிடம் உள்ள அந்த கொலுசை காட்டியுள்ளார்.

இரண்டு கொலுசும் சந்தேகத்துக்கு இடமின்றி ஒத்துபோகவே, பேருந்திலிருந்து எடுக்கப்பட்ட தங்க கொலுசானது, கஸ்தூரிக்கு சொந்தமானதுதான் என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து, பேருந்தில் கிடந்த தங்க கொலுசை களியக்காவிளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த  புஷ்பராணிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர் காவலர்கள். அதன்பின், அவர் முன்னிலையிலேயே உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் கஸ்தூரியிடம் கொலுசை ஒப்படைத்தார். 

பேருந்தில் கிடைத்த கால் கொலுசை காவல்நிலையத்தில்  ஒப்படைத்து, உரியவரிடம் சேர்ப்பித்த புஷ்பராணியை போலீசாரும் பொதுமக்களும் பாராட்டினர்.

தங்க கொலுசுக்கு ஆசைப்படாமல் உண்மைக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு அவற்றை காவல் நிலையம் மூலம் உரியவரிடம் ஒப்படைக்க காரணமாயிருந்த புஷ்பராணி, கன்னியாகுமரி மாவட்டத்தின் தங்க ராணியாக ஜொலிக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments