பேருந்து மோதி இழுத்து செல்லப்பட்ட பைக்: மனிதாபிமானம் இல்லாமல் தொடர்ந்து ஓட்டிய டிரைவர்; தீ பற்றி முன்னாள் கவுன்சிலர் , நண்பர் பலி
நாகமலைபுதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து டூவிலரை இடித்து இழுத்து சென்றதில் தீ பிடித்து முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவர் பலியாகினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள ஊத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கோபு . இவர் முன்னாள் கவுன்சிலர் . கோபுவும் இவரின் நண்பர் புண்ணிய மூர்த்தியும் மதுரையில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்தனர். நேற்றிரவு வேலையை முடித்து விட்டு மதுரையில் இருந்து இருவரும் நாகமலை புதுக்கோட்டைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காமராஜர் பல்கலைக்கழகம் அருகில் தேனி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கோபு , புண்ணியமூர்த்தி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
பேருந்தின் முன் பக்கத்தில் சிக்கிய இரு சக்கர வாகனத்தோடு கோபு மற்றும் புண்ணியமூர்த்தி சில அடி தூரம் இழுத்து செல்லப்பட்டனர். இதில், டூவீலர் நடுரோட்டில் தீப்பிடித்து பற்றி எரிந்தது. இந்த விபத்தில் டூவீலரில் சென்ற இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து நிறுத்தப்படவே இல்லை. எந்த அசம்பாவிதமும் நடக்காதது போல டிரைவர் பேருந்தை தொடர்ந்து ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்கவே, நாகமலைபுதுக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து எரிந்து கிடந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து நடந்த இடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை மடக்கி நிறுத்திய போலீஸார் டிரைவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Comments