தமிழகத்தில் புதிய திட்டங்கள் - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

0 6418
தமிழகத்தில் புதிய திட்டங்கள் - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில், துறைமுக மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் தமிழகம் பயன்பெறும்  வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாக இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் வழித்தடங்களில் இந்த தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மும்பை-கன்னியாகுமரி இடையேயும் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் கேரளாவின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் நவீன சாலைகள் அமைக்கப்படும்.

சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை திட்டம் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 277 கிலோமீட்டர் நீளத்திற்கு விரைவுச் சாலையாக, சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை பணிகளுக்கான ஒப்பந்தம் வரும் நிதியாண்டில் வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கும் .

இதேபோல, 278 கிலோமீட்டர் தொலைவுக்கு பெங்களூரு-சென்னை இடையே விரைவுச் சாலை திட்டம் நடப்பு நிதியாண்டிலேயே தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல் பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் சென்னை உள்ளிட்ட 5 முக்கிய மீன்பிடி துறைமுகங்களை பொருளாதார மையங்களாக மேம்படுத்தும் பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments