ஆதரவற்ற முதியவர்களை சாலையில் தூக்கி வீசி சென்ற அரசு அதிகாரிகள்.. குவியும் கண்டனங்கள்!

0 2303

மத்திய பிரதேசத்தில் ஆதரவற்ற 10க்கும் மேற்பட்ட முதியோரை இந்தூர் நகராட்சி அதிகாரிகள் சாலையில் தூக்கி வீசிய சம்பவம் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மாவட்டம் ஆதரவற்றோர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் பத்து நகரங்களில் ஒன்றாக உள்ளது. அங்கு பொதுவாக ஆதரவற்று சுற்றி திரியும் முதியவர்களை அதிகாரிகள் அரசு காப்பகத்திற்கு அழைத்து செல்வது வழக்கம். சமீபத்தில் இந்தூர் நகராட்சி பணியாளர்கள் அவ்வாறு ஆதரவற்ற முதியவர்களை பிடித்து லாரியில் ஏற்றி, அரசு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், போகும் வழியில் அவர்களில் சிலரை மனிதாபிமானமற்ற முறையில் சாலையில் இறக்கி விட்டு சென்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

இந்த கொடுமையான சம்பவத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் வெளியிட்டார். இதுகுறித்து அவர், ”இந்த சம்பவத்தில், அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றும் பணியாளர்களை தண்டிக்காமல் அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், இந்தூர் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து நகராட்சி துணை ஆணையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேவேளையில், சாலையில் இறக்கிவிடப்பட்ட முதியவர்கள் அரசு காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஆதரவற்ற முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளே இரக்கமற்ற முறையில் சாலையில் அனாதையாக இறக்கிவிட்டு சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments