வலிப்பு நோயைக் கண்டுபிடிக்கும் தலைக்கவசம்.. அருகிலுள்ள மருத்துவமனைக்கும் தானாகவே மெசேஜ் அனுப்பும்!

0 1726

வலிப்பு நோயை 10 நிமிடத்திலிருந்து 3 நிமிடத்திற்கு முன்னதாகவே கணிக்கக்கூடிய புதியவக தலைகவசத்தை கேரளாவின் மத்திய பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. 

மூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரை பாதிப்பது வலிப்பு நோய். வலிப்பு நோய் என்பது மூளையில் ஏற்படும் இயல்புக்கு மீறிய மின்னிறக்கத்தால் அடிக்கடி ஏற்படும் தாக்கமாகும். ‘காக்காய் வலிப்பு’ என்று தவறாக அழைக்கப்படுகிற இந்த நோய் எந்த அறிகுறியும் இன்றி திடீரெனத் தாக்கும். சமீபத்திய புள்ளிவிவரத்தில் இந்தியாவில் 100 பேரில் ஒருவர் வலிப்பு நோயால் தாக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். பிறந்த குழந்தை முதல் முதியவர் என எல்லா வயதினரையும் இந்த நோய் பாதிக்கிறது. 

இந்த நிலையில் , கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறைத் தலைவர் ராஜேஷ், பேராசிரியை தஸ்லீம்மா, ஆய்வு மாணவரான பாசில் ஆகியோர் இணைந்து வலிப்பு நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே கணிக்கக் கூடிய தலைக்கவசத்தை வடிவமைத்துள்ளனர்.

இப்போதைய நிலையில் இந்த தலைகவசத்தின் வடிவத்துக்கு காப்புரிமை வாங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தயாரிக்கப்பட்ட பொருளுக்கு காப்புரிமை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வடிவத்திலும், எடையிலும் சாதாரண ஹெல்மெட் போலவே இருப்பதால் தலையில் கூடுதல் எடையை சுமப்பதாக இருக்காது. மேலும் தலைகவசத்தின் உதவியுடன் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு தன்னிச்சையாக செல்போன் மெசேஜ் மூலம் தகவல் செல்லும் வசதியையும் ஏற்படுத்த உள்ளனர். மூளை நரம்பியல் தொடர்பாக பலகட்ட ஆராய்ச்சிக்குப் பின்பே தலைகவசம் வடிவமைக்கபட்டுள்ளது.

இது குறித்து கணினி அறிவியல் துறைத் தலைவர் ராஜேஷ், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தலைக்கவசமானது மூன்று முதல் 10  நிமிடங்களுக்கு முன்பே வலிப்பு வரப்போவதை உணர்த்திவிடும். இருந்தாலும், கடைசி 3 நிமிடங்களில் மிகத் துல்லியமாகவும் காட்டும் என சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வலிப்பு நோய் உள்ளவர் பயணத்தை தவிர்க்கவோ, அருகில் இருப்பவரிடம் உதவி கேட்கவோ முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வலிப்பு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வலிப்பு நோயை முன்னதாகவே கணிக்கக்கூடிய தலைகவசம் காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments