மீண்டும்.. மக்கள் நலப் பணியாளர்கள்... மு.க.ஸ்டாலின் வாக்குறுதி.!
திமுக ஆட்சிக்கு வந்ததும், பணியிலிருந்து நீக்கப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில், குப்பம் செல்லும் சாலையில், கே.பூசாரிப்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற பரப்புரையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், நூறே நாட்களில், கோரிக்கை மனுக்களுக்கு, தனி வாரியம் அமைத்து தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார்.
அதிமுக ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு, திமுக ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக பணி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட தமிழக நலனுக்காக, பல்வேறு மக்கள்நல போராட்டங்களை முன்னெடுத்த இயக்கம் திமுக என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். நாட்டில், 1970ஆம் ஆண்டுகளில் அமலான எமர்ஜென்சியின்போது, தாமும், திமுக நிர்வாகிகளும், மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பல்வேறு சொல்லொண்ணா இன்னல்களுக்கு உள்ளான நாள் இன்று என, மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.
Comments