ஆசிரியரின் மனைவிக்கு போலி மருத்துவரிடத்தில் கருக்கலைப்பு... தாய் உள்பட 4 பேர் கைது!
ஆத்தூர் அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த தாய் உள்ளிட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரையடுத்து மல்லியகரை பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. சரண்யாவின், கணவர் அருள் கடலூரிலுள்ள அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் , சரண்யா மீண்டும் கருவுற்றார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த சரண்யா மல்லியகரை அருகேயுள்ள கோபாலபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்தார்.
ஏற்கனவே, 2 பெண் குழந்தைகள் இருப்பதால் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிந்து கொள்ள சரண்யாவின் தாயார் பூங்கொடி முடிவு செய்துள்ளார். இதற்காக , பக்கத்து வீட்லுள்ள அலமேலு என்பவரிடத்தில் பூங்கொடி விவரம் கூறி உதவி கேட்டுள்ளார்.
அலமேலு வழியாக ஆத்தூரை சேர்ந்த ஸ்கேன் மையம் நடத்தி வரும் புகழ் என்பவர் பூங்கொடிக்கு அறிமுமாகியுள்ளார். புகழ் நடத்தி வந்த ஸ்கேன் மையத்தில் சரண்யாவுக்கு சட்ட விரோதமாக ஸ்கேன் செய்து பார்த்ததில், கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரிய வந்தது. மூன்றும் பெண் குழந்தைகள் என்பதால், இந்த கருவை அழிக்க சரண்யாவும் தாயும் முடிவு செய்துள்ளனர்.
ஆத்தூரை சேர்ந்த போலி மருத்துவர் பூமணி என்பவர் வீட்டில் வைத்து கடந்த 25 ஆம் தேதி சரண்யாவுக்கு ரகசியமாக கருக்கலைப்பு செய்துள்ளார். அப்போது, சரண்யாவின் கர்ப்பப்பையில் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார். தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை செய்து அகற்றி சரண்யாவின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினர்.
இந்த சம்பவம் குறித்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத் குமார், மல்லியகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட மல்லியகரை போலீசார் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட சரண்யாவின் தாய் பூங்கொடி உடந்தையாக செயல்பட்ட அலமேலு, சின்ராசு , சிவ பிருந்தாதேவி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது கருக்கலைப்பு தடைச் சட்டம் , கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சரண்யாவுக்கு ஸ்கேன் செய்த புகழ் மற்றும் போலி மருத்துவர் பூமணி ஆகிய 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Comments