மியான்மர் அதிபருடன் ஆங் சான் சூகியும் கைது... நாட்டைக் கட்டுக்குள் கொண்டுவந்தது ராணுவம்... என்ன நடக்கிறது மியான்மரில்?

0 10078

மியான்மர் அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் நிலவி வந்த நிலையில், அந்நாட்டு அதிபர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஒரு வருட காலத்துக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுவதாக மியான்மர் ராணுவத்துக்கு சொந்தமான மியாவாடி ( Myawaddy TV ) தொலைக்காட்சியில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மியான்மர் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

image

மியான்மர் நாட்டில், கொரோனா பரவல் மத்தியிலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் அரசு மீதான அதிருப்தி மற்றும் கொரோனா பிரச்னை காரணமாகக் குறைவான வாக்குகளே பதிவாகின. பொதுத் தேர்தல் முடிவுகள் முறையாக வெளியாகும் முன்பே, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 83 சதவிகித இடங்களைக் கைப்பற்றியதாக அறிவிப்பு வெளியானது. ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் ஆட்சியில் அமரும் என்றும் அறிவிக்கப்பட்டது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற USDP ( Union Solidarity and Development Party ) கட்சி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதால், ராணுவம் தேர்தல் முடிவை ஏற்க மறுத்தது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக ராணுவம் எழுப்பிய குற்றச்சாட்டை மியான்மர் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வந்தது. இது தொடர்பாக ராணுவம் மியான்மர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும், கடந்த சில வாரங்களாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் தான், மியான்மர் நாடாளுமன்றம் இன்று கூட இருந்தது. இந்தக் கூட்டத் தொடரில் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் முறையாக நாடாளுமன்றத்தால், ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய அரசு அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராணுவம் மியான்மரின் முக்கியத் தலைவர்களைக் கைது செய்து காவலில் வைத்துள்ளது. இதனால், தேர்தல் முடிவுகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காமல் அடுத்த அரசு அமைக்கப்பட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

image

இன்று அதிகாலை மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவரும் அரசின் ஆலோசகருமான ஆங் சான் சூகி, மியான்மர் அதிபர் வின் மைன்ட் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மியான்மரின் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹியாங் செயல் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மியான்மர் ராணுவத்தின் மியாவாடி தொலைக்காட்சி, ”நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதனால், நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க ஒரு வருட காலத்துக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுகிறது” என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கை மியான்மரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் நேபிதா, முன்னாள் தலைநகர் யாங்கூன் உள்ளிட்ட மியான்மரின் முக்கிய நகரங்களின் வீதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி, இணையம் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் மியான்மரில் மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்படப்போகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments