தமிழகத்தில் ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

0 4994
தமிழகத்தில் ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவிப்பு

தமிழகத்தில் ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 11 லட்சத்து 43ஆயிரம் விவசாயிகளுக்கு, ஆயிரத்து 117 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் பெய்த கன மழை மற்றும் மிக கன மழை காரணமாக, 6,62,689  ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 18,645 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களும், ஆக மொத்தம் 6,81,334 ஹெக்டேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையான 13,500 ரூபாய் என்பதை 20,000 ரூபாயாக உயர்த்தியும்,  மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையான ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 7,410 ரூபாய் என்பதை, 10,000 ரூபாயாக உயர்த்தியும், பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 18,000 ரூபாய் என்பதை, 25,000 ரூபாயாக உயர்த்தியும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உச்சவரம்பைத் தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கவும் ஆணையிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி,  ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் பெய்த கன மழையின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான 6,81,334 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சுமார் 11.43 லட்சம் விவசாயிகளுக்கு, ஆயிரத்து 117 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்நிவாரணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments