2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பொதுபட்ஜெட்... நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 1959

2021 - 2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் சலுகைகள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, வரும் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை இன்று காலை 11 மணிக்கு நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். தற்போது தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை முழுவதும் காகிதமில்லா வகையில் டிஜிட்டல் பட்ஜெட்டாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

மேலும் நிதி நிலை அறிக்கை தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பட்ஜெட் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் நிதி நிலை அறிக்கையின் விபரங்கள் உடனுக்குடன் இணையதளத்திலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிதி நிலை அறிக்கையில், வருமான வரி தொடர்பான சலுகை இருக்குமா என அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இதேபோல் கொரோனா தொற்று மற்றும் பொது முடக்கத்தால் நலிந்து போன சிறு, குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் சலுகைகள் இருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பொருளாதார முன்னேற்றத்திற்காக 210 பில்லியனுக்கும் அதிகமான ரூபாயைத் திரட்டும் வகையில் பல உயர்தர பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் உணவுக்கான மானிய ஒதுக்கீடு 4 விழுக்காடு முதல் 6 விழுக்காடு வரை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும், சுகாதாரத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிகிறது. 

ஆனால் பெருந்தொற்று காலத்தில் ஏற்கனவே சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதால் தற்போது தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் திட்டங்களை அறிவிக்கலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments