காய்ச்சலுக்கு ஓவர் டோஸ் 1 ½ வயது ஆண் குழந்தை பலி..! கோகுலம் கிளினிக் கோளாறு

0 22901

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு, பயிற்சி இல்லாத செவிலியர்களைக் கொண்டு ஊசி மூலம் ஓவர் டோஸ் மருந்து செலுத்தப்பட்டதால் குழந்தை சுய நினைவிழந்து உயிரிழந்த விபரீதம் அரங்கேறியுள்ளது.

ஒட்டப்பிடாரத்தை அடுத்த கொல்லங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி - வெயிலாட்சி தம்பதியின் ஒன்றரை வயது மகன் மகிழரசன். கடந்த 27ஆம் தேதி மகிழரசனுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை கயத்தாறில் உள்ள கோகுலம் கிளினிக் என்ற மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது மருத்துவர் இல்லாத நிலையில், செவிலியர்களே மகிழரசனுக்கு சிகிச்சை அளித்தனர் என்று கூறப்படுகிறது.

நள்ளிரவில் குழந்தைக்கு வலிப்பும் உடல் நடுக்கமும் ஏற்பட்டதாகக் கூறும் உறவினர்கள், செவிலியர்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்கின்றனர். மருத்துவரை அழைக்குமாறு கூறியதை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மறுநாள் காலை வந்த மருத்துவமனையின் நிறுவனரும் மருத்துவருமான சித்திரைதாஸ்சிங் என்பவர் குழந்தை மகிழரசன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

செவிலியர் பயிற்சி முடித்த குழந்தையின் உறவினரான வீரலட்சுமி என்பவர், மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் முறையான பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்றும் குழந்தைக்கு அளவுக்கு அதிகமான டோஸ் மருந்துகள் கொடுக்கப்பட்டதே இறப்புக்குக் காரணம் என்றும் குற்றம்சாட்டுகிறார். 

குழந்தையின் இறப்புக்கு நீதி கேட்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், போலீசாரின் அறிவுறுத்தலுக்குப் பிறகு முறையாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவமனை நிர்வாகத்தினர், முறையான சிகிச்சையே குழந்தைக்கு அளிக்கப்பட்டதாகவும் அதுகுறித்த விவரங்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY