புதுச்சேரி திருடருக்கு ஆந்திராவில் சாமியாராக புரமோஷன்! - தமிழகத்துக்கு வேப்பிலை அடிக்க வந்த போது கொத்திய போலீஸ்

0 28362

ஆந்திர வாலிபரிடத்தில் 10 லட்சம் மோசடி செய்ய முயன்ற புதுச்சேரி போலி சாமியாரை போலீஸார் அலேக்காக தூக்கினர்.

புதுச்சேரி குருமாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சரவணமுத்துரமேஷ் ( வயது 53) புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் திருட்டு, வழிப்பறி, செயின்பறிப்பு, மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் போலீசில் பிடியில் இருந்து தப்பிக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலத்திற்கு தப்பியோடியுள்ளார். அங்கு, பிரகாசம் மாவட்டத்திலுள்ள கண்டவாணிபள்ளி என்ற கிராமத்திலுள்ள ஆசிரமத்தில் தங்கியுள்ளார். அங்கே, தமிழகத்தில் இருந்து வந்த அற்புத சாமியாராக தன்னை சரவண முத்து ரமேஷ் காட்டிக் கொண்டார். பக்தர்களுக்கும் ஆசி வழங்கி வந்துள்ளார். ஆந்திராவில் அவருக்கு சர்வ சரவணமுத்து ரமேஷ் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.

 இந்த நிலையில் ஆசிரம் அருகில் டீ கடை நடத்தி வந்த துளசிநாயர் என்பவர் மகன் ரவீந்திரநாத் (25) 2  ஆண்டுகளாக சாமியாருக்கு டீ, உணவு பொருட்கள் வழங்கி வந்துள்ளார். சாமியார் என்று கருதி கைச் செலவுக்கு பணமும் கொடுத்து வந்துள்ளார். ரவீந்தரநாத்திடத்தில் நிறைய பணம் இருப்பதை நம்ம சாமியார் அறிந்து கொண்டார். பாடிய வாயும் ஆடிய காலும் நிற்குமா... திருட்டு புத்தி கொண்ட சரவணமுத்து , ரவீந்தரநாத்திடம் பணத்தை ஆட்டைய போட திட்டம் தீட்டினார். வாலிபர் ரவீந்திரநாத்தை அழைத்து,' நீ தொழில் தொடங்கி லட்சாதிபதியாகும் யோகம் வந்துள்ளது. ரூ.10 லட்சம் ரூபாய் கொண்டு வா, புதுச்சேரியில் உனக்கு நானே தொழில் தொழில் தொடங்கி வைத்து ஆசி செய்கிறேன் ' என்று ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

இதை நம்பிய ரவீந்திதரநாத் ரூ.10 லட்சம் பணத்துடன் சாமியாருடன் காரில் புதுச்சேரி புறப்பட்டுள்ளார். இடையில், விழுப்புரத்தில் ஓய்வு எடுத்து விட்டு பயணத்தை தொடங்குவோம் என்று சாமியார் கூறியுள்ளார். தொடர்ந்து, விழுப்புரத்தில் விடுதியில் அறை எடுத்து இரவில் தங்கியிருக்கின்றனர். இரவு நேரத்தில் ரவீந்தரநாத் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, சாமியார் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் தப்பி விட்டார். ரவீந்தரநாத் விழித்து பார்த்த போது, சாமியார், பணத்துடன் ஓடி விட்டதை கண்டு அழுது புலம்பினார். பின்னர், சாமியார் மீது விழுப்புரம் போலீஸ் எஸ்.பி., ராதாக்கிருஷ்ணனிடம் ரவீந்தரநாத் புகார் கொடுத்தார்.

இத்துடன் சாமியாரின் லீலைகள் நிற்கவில்லை. இனிதான் ட்விஸ்ட்டே இருக்குது. புதுச்சேரியில் திருடனாக இருந்து ஆந்திராவில் சாமியாராக புரமோஷன் பெற்ற சரவணமுத்துவுக்கு தமிழகத்தில் ஆசிரமம் ஒன்றை தொடங்க ஆசை இருந்துள்ளது. இதனால், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்டமங்கலம் ஒன்றித்துக்குட்பட்ட பக்கிரிபாளையம் என்ற இடத்தில் 5.60 லட்சம் மதிப்பு கொண்டநிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யவே, ரவீந்திரநாத்திடத்தில் இருந்து பணத்தை ஆட்டைய போட்டுள்ளார். அந்த பணத்தை புதுச்சேரியில் உள்ள நண்பரிடத்தில் கொடுத்து விட்டு, பத்திரப்பதிவு நடைமுறைகள் குறித்து தெரிந்து கொள்ள தன் காரில் கண்டமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு போலி சாமியார் வந்துள்ளார். அப்போது, அவரின் கார் எண்ணை வைத்து சரவணமுத்துவை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். சிக்கிக் கொண்ட ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், போலீஸார் தடுத்து விட்டனர். புதுச்சேரியில் நண்பரிடத்தில் சாமியார் ரூ. 9.60 லட்சமும் சாமியாரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் திருட்டு கற்று ஆந்திராவில் சாமியாராக புரமேஷன் பெற்று தமிழகத்தில் ஆசிரமம் கட்ட நினைத்த சாமியார் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments