தொடங்கியது மூங்கில் அரிசி சீசன்: விலை கிலோ ரூ.500 ; பழங்குடியின மக்கள் உற்சாகம்!

0 15127

கூடலூரில் 50 வருடங்களான மூங்கில் மரங்களில் இருந்து கிடைக்கும் மூங்கில் அரிசி சீசன் தொடங்கியுள்ளது. பழங்குடியின மக்கள் அவற்றை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர், முதுமலை பகுதியிகளில் சாலையோரத்தில் ஏராளமான மூங்கில் காடுகள் உள்ளன. யானைகளுக்கு இந்த மூங்கில் மரங்கள் பிடித்த உணவு. மூங்கில் மரங்களின் இலைகள், அதன் தண்டுப்பகுதிகளை யானைகள் விரும்பி உண்ணும். சுமார் 50 ஆண்டு வயது கொண்ட மூங்கில் மரங்களில் இருந்து மருத்துவ குணங்கள் கொண்ட மூங்கில் அரிசி கிடைக்க தொடங்கியுள்ளது. மூங்கில் அரிசி நாம் அன்றாடம் சாப்பிடும் நெல் அரிசி போலவே இருக்கும்.

பழங்குடி மக்களின் முக்கிய உணவு இந்த மூங்கில் அரிசிதான். உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை அள்ளி வழங்கும். மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேர்க்கப்படும் விதைகளாகும். மூங்கில் அரிசி என்பது அதிகபடியான ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டது. அரிசிக்கு மாற்றாக சமைத்து உண்ணக் கூடியது. நன்கு நீண்ட ஆண்டுகள் வளர்ந்த மூங்கிலில் மட்டுமே இந்த பூக்கள் பூக்கும். அதிலிருந்து மட்டுமே மூங்கில் அரிசியை சேகரிக்க முடியும். மூங்கில் அரிசியில் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.

தற்போது, முதுமலை கூடலூர் இந்த வருடம் 50 வயதுக்கு மேலான மூங்கில் மரங்களில் இருந்து மூங்கில் அரிசி அதிகளவில் கிடைக்க தொடங்கியுள்ளது. மூங்கில் அரிசியை அந்த பகுதிகளில் உள்ள பழங்குடியினர் சேகரித்து வைத்து பக்குவப்படுத்தி வைத்துள்ளனர். ஏற்கனவே , சீசன் காலத்தில் மூங்கில் அரிசி வேண்டும் என்று கேட்டவர்களுக்கு மூங்கில் அரிசியை கிலோ ரூ. 500 -க்கு விற்பனை செய்து வருகிறார்கள். மூங்கில் அரிசி சாதாரண அரிசி சமைப்பது போல் சமைத்து, அதில் தேன்,கருவேப்பில்லை, உப்பு.மஞ்சள் தூள் போன்றவற்றை போட்டு வடிகட்டாமல் சமைத்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும் என்றுபழங்குடியின மக்கள் கூறுகின்றனர். சுற்றுலா பயணிகளும் மூங்கில் அரிசியை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments