டிராஃபிக் ஜாமை வென்று, றெக்கை கட்டிப் பறக்க பேட்டரி சைக்கிள்: சீர்மிகு நகரின் ஸ்மார்ட் பைக் சேவையில் புதுவரவு
சென்னையில் ஸ்மார்ட் பைக் சேவை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், புதிதாக பேட்டரி மூலம் இயங்கும் ஸ்மார்ட் இ-பைக் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல்நல பராமரிப்பு, போக்குவரத்து நெரிசலிலும் எளிதாகப் பயணம் என சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட் பைக் சேவையை எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்கும் செய்தி
மோட்டார் வாகன பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்கவும், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் குறைந்த அளவிலான தூரங்களுக்கு பயணிக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டதுதான், ஷேரிங்-சைக்கிள் முறை.
சென்னையில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்பைக் சைக்கிள் சேவை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக 78 சைக்கிள் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில் ஸ்மார்ட் பைக், எக்கோ பைக் என இருவகையான சைக்கிள்கள் உள்ளன. தற்போது நெக்ஸ்ஜென், இ-பைக் என மேலும் இரண்டு வகை சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
செயின் இல்லாமல், ட்யூப்லெஸ் டயர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, நெக்ஸ்ஜென் சைக்கிள். இவற்றைப் பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் 50 பைசா செலுத்த வேண்டும்.
இ-பைக் என்பது சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய பேட்டரி மூலம் இயங்கும் சைக்கிள். மற்ற ஸ்மார்ட் வகை சைக்கிள்களைவிட இ-பைக் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டவை என்கின்றனர் பயனாளர்கள்.
6 முதல் 8 மணி நேரம் சார்ஜ் செய்யப்பட்டு ஒவ்வொரு நிலையங்களிலும் நிறுத்தப்படும் இ-பைக்கை, அதிகபட்சமாக 40 முதல் 45 கிலோ மீட்டர் தொலைவு இயக்கலாம். அவ்வப்போது பெடல் பயன்படுத்தி ஓட்டினால் 60 கிலோ மீட்டர் வரை ஓட்ட முடியும்.
முதல் 10 நிமிடங்களுக்கு 10 ரூபாய் மட்டுமே கட்டணம், அதற்கு பிறகு பயன்படுத்தும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பேட்டரி மூலம் இயங்கும் ஹாரன், ஹெட் லைட், பேட்டரி சார்ஜ் அளவை காண்பிக்கும் வசதி மற்றும் இருக்கையை உயரத்திற்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் வசதி இ-பைக்கில் உள்ளது.
நீண்ட தூரம் பெடல் சைக்கிள்களை பயன்படுத்த முடியாதவர்கள், குறிப்பாக முதியவர்கள், பெண்கள் இ-பைக் சைக்கிள்களை பயன்படுத்துவது சுலபம்.
அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் விரைந்து செல்ல உதவியாக இருக்கும். இந்த இ-பைக் உள்ளிட்ட ஸ்மார்ட்பைக் சேவையை பயன்படுத்த, பிளேஸ்டோரில் இருந்து smartbike செயலியை பதிவிறக்கம் செய்து, பெயர் விவரங்கள், புகைப்படத்துடன் கூடிய ஆதார் உட்பட ஏதாவது ஒரு அடையாள அட்டையை சமர்ப்பித்து பயனாளராக வேண்டும்.
எந்தெந்த பகுதிகளில் ஸ்மார்ட் பைக் நிலையங்கள் உள்ளது என்பதை செயலி மூலமே தெரிந்து கொள்ளலாம்.
பயன்படுத்திவிட்டு அருகில் உள்ள ஸ்மார்ட் பைக் நிலையத்தில் நிறுத்திவிட வேண்டும், வீட்டிற்கு எடுத்துச் சென்றாலோ திருட முயற்சித்தாலோ, ஜிபிஆர்எஸ் கண்காணிப்பில் சிக்கிக் கொள்வார்கள்.
இ-பைக்கை அதிக பட்சமாக மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். பயன்பாடு அதிகரிப்பதற்கு ஏற்ப கூடுதலாக 24 ஸ்மார்ட்பைக் நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
ஸ்மார்ட் பைக், எக்கோ பைக் சைக்கிள்கள் 500 என்ற எண்ணிக்கையில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. தற்போது இ-பைக், நெக்ஸ்ஜென் சைக்கிள்கள் தலா 500 என்ற எண்ணிக்கையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ள ஸ்மார்ட் பைக் மொபிலிட்டி நிறுவனம் விரைவில் ஐயாயிரம் ஸ்மார்ட் சைக்கிள்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அவற்றில் 40 அல்லது 50 சதவீதம் இ-பைக் வகையை சேர்ந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
சென்னையில் பரவலாக ஸ்மார்ட் பைக் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், இ-பைக் சைக்கிள்களை தினமும் சார்ஜ் செய்ய அண்ணா நகரில் இயங்கும் பராமரிப்பு பிரிவிற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது.
எனவே, ஒவ்வொரு நிலையங்களிலும் சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் மிதிவண்டி பயன்பாட்டை அதிகரிக்க, முக்கிய சாலைகளில் "சைக்கிள் டிராக்" அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Comments