மசினகுடி ரிசார்ட்கள் போடும் மந்திரங்கள்...சீல் வைக்க சென்று இரக்கம் காட்டிய அதிகாரிகள்!
மசினகுடியில் யானை மீது தீ மூட்டிய சம்பவத்தில், ரிசார்ட்களுக்கு சீல் வைக்கச் சென்ற அதிகாரிகள் உரிமையாளர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு திரும்பினர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகேயுள்ள மசினகுடியில் 40 வயதான ஆண் யானை தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. பின்னர், அந்த யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் இறந்தும் போனது. இது தொடர்பாக பிரசாத் மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ரேமண்ட் டீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரிக்கி ராயன் என்பவரைத் தேடி வருகின்றனர். இன்று வரை ரிக்கி ராயன் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், சமூக ஆர்வலரான யானை ராஜேந்திரன் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், அனுமதியின்றி சொகுசு விடுதி கட்டும் போது, லஞ்சம் பெற்றுக்கொண்டு கண்டும் காணாமலும் இருந்த கிராம நிர்வாக அதிகாரி, ஊராட்சி செயலர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கையை இரண்டு வாரத்தில் எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப் படி அதிகாரிகள் மசினகுடி, பொக்காபுரம், மாவனல்லா போன்ற பகுதிகளில் 55 தங்கும் விடுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தங்கும் விடுதி உரிமையாளர்கள் தாங்களாகவே விடுதியைப் பூட்டிவிட்டு நுழைவு வாயிலில் தங்கும் விடுதி செயல்படாது என துண்டு பிரசுரங்களை ஒட்டியுள்ளனர். மேலும், இனி முறையாக அனுமதி கிடைத்த பின் திறக்க முடிவு செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தை மீறி யாராவது ரிசார்ட்களை திறந்தால் தாங்களே முன் வந்து பிடித்துத் தருவதாகவும் அதிகாரிகளிடம் உறுதியளித்தனர். மேலும், தங்கும் விடுதிகள் சீல் வைத்தால் மீண்டும் திறக்கமுடியாத நிலை ஏற்படுவதாகவும் அதிகாரிகளிடம் வேதனை தெரிவித்தனர்.
இதனால், மனம் இரங்கிய அதிகாரிகள் ரிசார்ட் உரிமையாளர்களிடத்தில் எழுத்து மூலமான உத்தரவாதத்தை மசினகுடி ஊராட்சி தலைவி மாதேவி வாங்கிக் கொண்டார். பின்னர், மேலதிகாரிகளிடத்தில் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாகக் கூறி சீல் வைக்காமல் திரும்பிச் சென்றனர்.
அதே வேளையில், இத்தனை ஆண்டு காலம் முறையான அனுமதி இல்லாமல் ரிசார்ட்களை நடத்தி வந்த உரிமையாளர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்கிற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Comments