யானையால் கொல்லப்பட்ட ஆசிரியை... ஆபத்தில் முடிந்த டென்ட் கேம்ப்! காட்டுக்குள் நடக்கும் விதி மீறல்கள்

0 151242
டென்ட் கேம்ப்பில் யானையால் கொல்லப்பட்ட ஆசிரியை சகானா

சமீபத்தில் கேரளாவில் டென்ட் கேம்ப் என்ற போர்வையில் காட்டுக்குள் தங்கியிருந்த ஆசிரியை காட்டு யானையால் மிதித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு, டென்ட் கேம்ப் எனும் பெயரில் காட்டுக்குள் நடக்கும் விதிமீறல்கள் வெளியே தெரிய வந்துள்ளன.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் செலிரி பகுதியை சேர்ந்தவர் 26 வயதேயான சகானா. இவர், அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன்பு சகானா வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி என்ற இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுக்குள் உள்ள ரிசார்ட்டுக்கு தன் தோழிகளுடன் சென்றுள்ளார். இரண்டு சிறிய கட்டங்கள் கொண்ட இந்த ரிசார்ட்டை ஒட்டிய காட்டுப் பகுதிக்குள் 10 டென்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்தான், சகானா தங்கியிருக்கிறார். இரவு நேரத்தில் டென்டை விட்டு சகானா வெளியே வந்த போது, அங்கே நின்றிருந்த காட்டு யானை ஒன்று அவரை மிதித்து கொன்று விட்டது. சகானாவில் அலறல் சத்தம் கேட்டு மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். பிறகு, சகானாவின் உடல் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.image

இந்த சம்பவம் நடந்த ரிசார்ட், முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, வயநாட்டில் செயல்பட்டு வந்த ஏராளமான ரிசார்ட்களை மாவட்ட ஆட்சியர் அதீலா அப்துல்லா உடனடியாக மூட உத்தரவிட்டார். பொதுவாகவே, உதகை- மசினகுடி- வயநாடு வனப்பகுதிகளுக்குள் கணக்கிலடங்காத ரிசார்ட்டுகள் அனுமதியில்லாமல் செயல்பட்டு வருகின்றன. மசினகுடியிலும் ஒரு யானை உயிரை பறி கொடுத்து சட்டத்துக்குப் புறம்பான ரிசார்ட்டுகளை மூட வைத்தது என்றால், வயநாட்டில் சகானா பலியான சம்பவத்தால் ரிசர்ட்டுகள் மூடப்பட்டுள்ளன.

பொதுவாகவே நகரப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு வனம், வனம் சார்ந்த பகுதிகளில் சென்று தங்குவது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கும். குறிப்பாக, பணக்காரர்கள் டிராவல்லிங் செல்வதில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்காக, எவ்வளவு பணம் செலவழிக்கவும் தயாராக இருப்பார்கள். நகர்ப்புறவாசிகளின் இந்த ஏக்கத்தைப் பயன்படுத்தி சோசியல் மீடியாக்களில் டென்ட் டூரிசம் என்ற பெயரில் விளம்பரங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை டென்ட் ரிசார்ட் உரிமையாளர்கள் ஈர்க்கின்றனர். ஆனால், இந்த டெண்ட் கேம்ப்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பூஜ்யமே.

சகானா கொல்லப்பட்ட பிறகு, சம்பவ இடத்தை பார்வையிட்ட வயநாடு மாவட்ட ஆட்சியர் அதீலா அப்துல்லா, ''கேரள அரசின் அங்கீகாரம் பெற்ற உள்ளுர் குழுவினருடன் இணைந்து, கேரள வனத்துறை சில டென்ட் டூரிசத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு மட்டுமே பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இவை , முழுமையான பாதுகாப்பு வசதிகளுடன் செயல்படுபவை. வேறு எந்த டென்ட் ரிசார்ட்டுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதே போல, மழைக்காலத்தில் மான்சூன் டூரிசம் என்ற பெயரில் நிலச்சரிவு அடிக்கடி நடைபெறும் பகுதிகளிலும் இது போன்று டென்ட் அமைத்துத் தங்குவதாகவும் குற்றச்சாட்டு வந்துள்ளது'' என்று தெரிவித்தார்.

எனினும், ஊட்டி - மசினகுடி- வயநாடு- கோழிக்கோடு பகுதிகளில் மட்டும் 40 டென்ட் கேம்புகள் செயல்பட்டு வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதே போல, மூணாரிலும் டென்ட் கேம்ப் என்ற பெயரில் காட்டுக்குள் ஆபத்தான வகையில் சென்று தங்குகின்றனர். வயநாட்டில் பெரும்பாலானவர்கள் ஹோம் ஸ்டே என்ற பெயரில் லைசென்ஸ் வாங்கி விட்டு டென்ட் கேம்ப்புக்கு ஏற்பாடு செய்து வந்துள்ளனர். உள்ளுர் பஞ்சாயத்துத் தலைவர்களுக்குப் பணம் கொடுத்து சரி கட்டி விடுவதாகவும் சொல்லப்படுகிறது.

சுற்றுலா செல்வது என்பது வாழ்க்கையில் முக்கியமான அங்கமாக இருந்தாலும், நம் உயிர் அதை விட முக்கியம் என்பதை சுற்றுலாப்பயணிகள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments