இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய படத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்... பா. ரஞ்சித் தயாரிக்கிறார்!
இயக்குனரும் தயாரிப்பாளாருமான பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மெட்ராஸ், கபாலி, காலா என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பா.ரஞ்சித். இயக்குநர் மாரி செல்வராஜ் முதன்முறையாக இயக்கியிருந்த ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். முதல் படத்திலேயே தயாரிப்பாளராக வெற்றி கண்டார். அதனைத் தொடர்ந்து அதியன் ஆதிரை இயக்கியிருந்த ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தை தயாரித்தார். அத்திரைப்படமும் வணிக மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. தற்போது பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவை வைத்து பொம்மை நாயகி என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த 2019 ம் ஆண்டு இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஐந்து புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்தது. பரியேறும் பெருமாள் மற்றும் மேற்கு மலைத் தொடர்ச்சி போன்ற அழுத்தமான கதைகளம் கொண்ட படங்களை தந்த இயக்குநர்களான மாரி செல்வராஜ் மற்றும் லெனின் பாரதி, அறிமுக இயக்குநர்கள் சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ் மற்றும் பிராங்க்ளின் ஆகிய ஐந்து பேரின் படங்களையும் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியது. இதில் இயக்குனர் பிராங்க்ளின் இயக்கத்தில் சமுத்திரகனி நடித்து வரும் ’ரைட்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றினை நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அந்நிறுவனத்துடன் இணைந்து கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் விக்ரமின் மகன் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ள புதிய படம் ஒன்றினை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதையை இயக்குநர் மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ளதாகவும், துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கபடி விளையாட்டை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்திருந்தாலும், இந்த படம் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
Comments