கண்களுக்கு விருந்தான பாசறை திரும்பும் நிகழ்ச்சி!
டெல்லியில், குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகள், பாசறைக்கு திரும்பும் கண்கவரும் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்குப் பின் 4வது நாளில் முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. அதன்படி, டெல்லியின் விஜய்சவுக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முப்படைகளின் பாண்டு வாத்திய குழுவினருடன், மத்திய ஆயுத போலீஸ் படை,டெல்லி போலீஸ் படை பாண்டு வாத்திய குழுக்களும் பங்கேற்றன.
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாகவும் நிகழ்ச்சியில் இசை ஒலிக்கப்பட்டது.
முப்படைகளை சார்ந்த எக்காளம் ஊதுவோர் 60 பேர், தாரை ஊதுவோர் 17 பேர், மேளம் வாசிப்போர் 60 பேர் என பெரும் வாத்திய குழுவினர் இசை முழங்கினர். வெவ்வேறு படைகளின் இசைக்குழுக்களின் அணிவகுப்பு வியக்கும் வகையில் இருந்தது.
நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். மாலையில் சூரியன் மறைந்ததும் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் நாடாளுமன்ற கட்டிடங்கள் பல வண்ண மின் விளக்குகளில் ஒளிர்ந்தன.
Comments