தேரை இழுத்து தெருவில் விட்டது போல...நிர்கதியாக நின்ற காருக்கு ரூ.91000 பார்க்கிங் கட்டணம் செலுத்த உத்தரவு!
டாடா நானோ கார் உரிமையாளர் ஒருவருக்கு , 91000 ரூபாய் பார்க்கிங் கட்டணம் செலுத்தக்கூறி குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாடா நிறுவனம் தயாரித்த கார்களில் மிகவும் பிரபலமானது நானோ கார். குறைவான விலை, கண்கவர் வண்ணங்கள், சிறிய உருவம் என்று பல அம்சங்களால் பிரபலமடைந்தது நானோ கார். தற்போது 2 லட்சத்திற்கு விற்கப்படும் நானோ காரின் அறிமுக விலை 2009 ஆம் ஆண்டில் 115,000 ஆக இருந்தது. அந்த சிறிய காரை வைத்துக்கொண்டு பெரிய பஞ்சாயத்தை கூட்டியுள்ளார் வழக்கறிஞர் ஒருவர்.
குஜராத் மாநிலம் காந்திநகரை சேர்ந்தவர், சோனா சாகர் என்ற இளம் பெண் வழக்கறிஞர். சோனா சாகர்,கடந்த 2018 ஆம் ஆண்டு,ஜூன் மாதம் 7 ஆம் தேதி , தனது டாடா நானோ காரினை, பழுதுநீக்கம் செய்வதற்காக, அதே பகுதியை சேர்ந்த டாடா வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையமான ஹர்சோலியா பிரதர்சில் விட்டிருக்கிறார்.
அவரது நானோ கார் பழுதுநீக்கம் செய்யப்பட்டு, சோனா சாகருக்கு பழுதுநீக்க நிலையத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், 9900 ரூபாயை கட்டணமாக செலுத்த கூறியும் பணியாளர்கள் சோனா சாகரிடம் கூறியுள்ளனர்.
இந்த தகவலை தொடர்ந்து, காரை எடுத்துச்செல்ல வந்த சோனா சாகர் , அவர் வண்டியின் குளிர்சாதன வசதியும், மியூசிக் சிஸ்டமும் பழுதாகி உள்ளதாக கூறி, கட்டணம் செலுத்தமுடியாது என்று பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அதற்கு ஒருபடி மேலே சென்று, வண்டியை ஹர்சோலியா பிரதர்ஸ் பழுதுநீக்க நிலையத்திலேயே நிர்கதியாக விட்டுச்சென்றார்.
சோனா சாகர், 2019 ஆண்டு காந்திநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வாயிலாக , ஹர்சோலியா பிரதர்ஸ் பழுதுநீக்கும் நிலையத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அந்த நோட்டீஸில் அவர், பழுதுநீக்கும் நிலையம் முறையாக செயல்படவில்லை என்றும், அவரது டாடா நானோ காரை முழுமையாக பழுதுசெய்து அந்த நிறுவனம் அவரிடம் திருப்பித்தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதற்கு பதில் தரப்பில் நோட்டீஸ் அனுப்பிய ஹர்சோலியா பிரதர்ஸ் நிலையம், காரினை எடுத்துச்செல்லும்படி 58 மின்னஞ்சல்களை அவர்கள் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு சோனா சாகர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறியிருந்தது.
மேலும், காரினை நிர்கதியாக நிறுத்திவிட்டு சென்றதற்காக, நாளொன்றிற்கு 100 ரூபாய் விகிதம் , 910 நாட்களுக்கு ரூ .91000 பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவித்திருந்தது.
இதனை எதிர்த்து 2020 ஆம் ஆண்டு , சோனா சாகர், காந்திநகர் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ஹர்சோலியா பிரதர்ஸ் நிலையத்தை ஆறு முறை தொடர்புக்கொள்ள முயற்சித்தபோதும் அவர்கள் பதிலளிக்கவில்லை என்று கூறியிருந்தார் .
இந்த வழக்கை விசாரித்த, காந்திநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்,
ரூ 91000 பார்க்கிங் கட்டணத்தை சோனா சாகர் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பளித்தது.
அதற்கு விளக்கம் அளித்த, ஆணைக்குழுவின் தலைவர் டி.டி. சோனி "பழுதுநீக்க கட்டணத்தை செலுத்தாததால் சோனா சாகரை நுகர்வோராக கருதமுடியாது என்று கூறினார். மேலும்,பார்க்கிங் கட்டணத்துடன், கூடுதலாக ரூ.3500 சர்விஸ் சார்ஜை சோனா சாகர் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்
Comments