நேபாளத்தில் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற வேதாரண்யம் இளைஞர்... சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!
நேபாளத்தில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற வேதாரண்யத்தை சேர்ந்த இளைஞர் வசிஷ்ட் விக்னேசுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் வசிஷ்ட்விக்னேஷ் சிறந்த நீளம் தாண்டும் வீரர் ஆவார். கடந்த 18- ம் தேதி நேபாளத்தில் நடந்த சர்வதேச ரூரல் கேம்ஸ் மற்றும் ஸ்போட்ஸ் ஃபெடரேஷன் சார்பில் நடைபெற்ற இந்தோ- நேபாள் விளையாட்டு போட்டியில் பங்கேற்றார். இதில், நீளம் தாண்டுதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கமும் வென்று கொடுத்தார்.
தொடர்ந்து , போட்டிகள் முடிவடைந்ததும் நேபாளத்திலிருந்து சொந்த ஊரான தேத்தாகுடி கிராமத்துக்கு வருகை தந்த அவரை ஊர் எல்லையில் ஏராளமான கிராம மக்கள் கூடி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு, மாட்டு வண்டியில் அவரை ஏற்றி சுமார் 2 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்து சென்றனர். வரவேற்பு நிகழ்ச்சியின் போது, கிராம மக்கள் வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
'ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதே தனது லட்சியம்' என்று வசிஷ்ட்விக்னேஷ் தெரிவித்தார்.
Comments