கிம் ஜாங் உன்னின் சகோதரர் கொலை... நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானது ஆவணப்படம்!

0 4636

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடைபெற்ற வடகொரியா அரசியல் தலைவரின் வாரிசான கிம் ஜாங் நம்மின் கொலை வழக்கு உலகையே உலுக்கியது. இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கிம் ஜாங் நம்மின் கொலை தொடர்பாக ஆவணப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மூத்த சகோதரர் கிம் ஜாங் நம். வாரிசுப்படி வடகொரியாவின் முக்கிய தலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ஆவார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 2003 ம் ஆண்டு வடகொரியாவை விட்டு கிம் ஜாங் நம் வெளியேறினார். அதற்குப் பிறகு, 2010 ம் ஆண்டு இவரது இளைய சகோதரர் கிம் ஜாங் உன் அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், கிம் ஜாங் நம், கடந்த 2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவின், கோலாலம்பூர் விமான நிலையத்தில், அவர் அருகே வந்த இரு பெண்கள் ‘வி.எக்ஸ்’ எனும் கொடுமையான ரசாயன விஷத்தை ஸ்பிரே செய்துவிட்டு சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் கிம் ஜாங் நம் உயிரிழந்தார்.

ஸ்பிரே செய்தவர்கள் வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த இரு பெண்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘‘டி.வி காமெடி நிகழ்ச்சிக்கு இது போல் நடிக்கும்படி சிலர் கூறியதால் செய்தோம்’’ என்று தெரிவித்தனர். இந்தக் கொலை வழக்கு தொடர்புடைய வட கொரியர்கள் மலேசியாவிலிருந்து தப்பிச் சென்றனர்.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் கொலை சம்பவத்துக்கு வட கொரியா தான் காரணம் என்று தென்கொரியா குற்றம் சாட்டியது. அடுத்தடுத்து நடைபெற்ற விசாரணையில் கிம் ஜாங் நம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வியட்னாம் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களும் அப்பாவிகள் என்று தெரியவர அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிக்கப்பட்டுள்ளது ‘அஸ்ஸாசின்’ திரைப்படம். அமெரிக்க இயக்குனர் ரையன் வைட் இரண்டரை ஆண்டுகள் இந்த வழக்கை ஆய்வு செய்து அசாசின்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். கிம் ஜாங் நம்மின் கொலை மற்றும் அதன் பின்னணியில் இருந்த இரண்டு இளம் பெண்கள் குறித்த மர்மத்தை விலக்குவதாக இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் குறித்து இயக்குனர் ரையன் வைட், “மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த அவர்கள் இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஆனாலும், உலகம் மற்றும் சமூக ஊடகங்களின் குற்றச்சாட்டுகளை அவர்கள் அனுபவித்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments