இந்தியா- சிங்கப்பூர்- இந்தியா!- பஸ் பயணத்தை விரும்புபவர்களுக்கு புது அனுபவம்
கிர்கானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு பஸ் போக்குவரத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 4.500 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. சென்னையிலிருந்து கிளம்பினால் 4 மணி நேர விமானப்பயணத்தில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் கால் வைத்து விடலாம். ஆனாலும், பேருந்தில் சிங்கப்பூர் செல்வது சுற்றுலாப்பயணிகளுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும் என்ற எண்ணத்தில் கிர்கானை சேர்ந்த அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் என்ற நிறுவனம் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு பஸ் போக்குவரத்தை தொடங்குகிறது. இந்த பஸ்ஸில் 20 பேர் மட்டுமே பயணிக்க முடியும். பேருந்தில் வீட்டிலுள்ள போல சகல வசதிகளுடன் இருக்கும்.
மியான்மர், தாய்லாந்து , மலேசியா ஆகிய நாடுகள் வழியாக பேருந்து சிங்கப்பூரை எட்டும். மியான்மரில் யாலே, யாங்கூன் நகரங்களிலும் தாய்லாந்தில் க்ராபி, பாங்காங் வழியாகவும் மலேசியாவில் கோலாலம்பூர் நகரம் வழியாகவும் இந்த பேருந்து பயணிக்கிறது. முதலில் வருபவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.வரும் நவம்பர் 14 ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ் பயணத்தை தொடங்குகிறது. 20 நாள்களில் இந்த பஸ் சிங்கப்பூரை சென்றடையும்.
சில நாள்களுக்கு முன், இதே நிறுவனம் டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து சேவை வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த பேருந்து 18 நாடுகள் வழியாக 20,000 கிலோ மீட்டர் பயணித்து 70 நாள்களில் லண்டனை சென்றடையும். உலகிலேயே மிக நீளமாக பேருந்து சேவையாக டெல்லி- லண்டன் சேவை அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் விமானத்தில் பயணித்தாலும் ஒவ்வொரு நாட்டையும் அதன் அழகையும் ரசித்து கொண்டு பேருந்தில் பயணிப்பது என்பது தனி அனுபவமாக இருக்கும் . இதனால், இந்த பேருந்து சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments