அதிகமாகப் பரவுவதால் ஆபத்தானதாகத் திரிபடையும் கொரோனா வைரஸ்... நமக்கிருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே!

0 13090

லகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மரபியல் ரீதியாகத் திரிபடைந்து அதிவேகமாகப் பரவி வருகிறது. வைரஸ்கள் தன்னைத் தானே நகல் எடுத்து பல்கிப் பெருகும் போது அதன் மரபியல் கூறுகளில் ஏதாவது மாற்றம் நடந்துகொண்டே இருக்கும். கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவும்போது, கொரோனா வைரஸின் பிறழ்வுகளுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். காலப்போக்கில் இந்த பிறழ்வு அபாயகரமானதாக மாறிவிடும்.

இந்த நிலையில், கொரோனா வைரசின் ஆபத்தான திரிபைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 8 - ம் தேதி கனடாவின் ஒண்டாரியோவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஊழியர் ஒருவருக்குக் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்த இரண்டு வாரங்களில் முதியோர் இல்லத்தில் இருந்த 127 பேரை கொரோனா தாக்கியதில் 32 பேர் பரிதாபமாக இறந்தனர். கொரோனா வைரஸின் மாதிரியை சோதனை செய்தபோது, இங்கிலாந்திலிருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

image

இங்கிலாந்தில் திரிபடைந்த கொரோனா வைரஸ் ((501.Y.V1)) டிசம்பர் மாதத்தின் இறுதியிலிருந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலக நாடுகளின் கவனம் முழுவதும் இங்கிலாந்து திரிபின் மீது குவிந்திருக்க தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் மற்றும் பிரேசில் நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதில் தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸ் ஆன்டிபாடிகளை ஏமாற்றுவதும், தடுப்பூசிகள் அதற்கு எதிராகக் குறைந்த செயல் திறன் மட்டுமே கொண்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிரேசில் திரிபானது கொரோனாவிலிருந்து மீண்ட நபர்களையே மீண்டும் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுவிட்டதாகக் கருதப்பட்ட மனாஸ் நகரத்தை மரபியல் மாற்றமடைந்த பிரேசில் கொரோனா வைரஸ் தாக்கியதில் அந்த நகரம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஜனவரி மாதத்துக்குப் பிறகு மட்டும் மனாஸ் நகரில் கொரோனா வைரஸால் 3000 - க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வேகமாகப் பரவும் மூன்று கொரோனா வைரஸ் பிறழ்வுகளும் அடிப்படையில் ஒரு பொதுவான பண்பைப் பெற்றுள்ளன. மனித உயிரணுக்களுடன் வலுவாக இணைக்கும் ஆற்றலை மேம்படுத்தியுள்ளன.

2019 - ம் ஆண்டு இறுதியிலிருந்து கொரோனா வைரஸ் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் பரவி வந்த நிலையில், 2020 ம் ஆண்டின் இறுதியில் திடீரென்று ஆபத்து நிறைந்ததாகத் திரிபடைந்தது. ஏறக்குறைய பத்து மாதங்களுக்கு மேல் கொரோனா வைரஸ் திரிபடையாமல் இருந்ததனால் தான் விஞ்ஞானிகளால் தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முடிந்தது. கொரோனா வைரஸ் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் பிறழ்வுகளைப் போன்று அடுத்தடுத்து மரபியல் மாற்றமடைந்துகொண்டிருந்தால் கொரோனா எதிர் கொள்ளும் விவகாரத்தில் பின்னடைவை சந்திப்போம் என்று சுகாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

வைரஸ் பிறழ்வு ஏற்படுவது எப்படி?

வைரஸ்கள் பொதுவாக தங்களைத் தாங்களே நகல் எடுத்துக் கொள்வதில் சிறந்தவை அல்ல. அவை, உடலுக்குள் நுழைந்த பிறகு, தன்னைத் தானே நகல் எடுத்து பல்கிப் பெருகும் போது அதன் மரபியல் கூறுகளில் ஏதாவது மாற்றம் நடந்துகொண்டே இருக்கும். கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவும்போது, கொரோனா வைரஸின் பிறழ்வுகளுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். காலப்போக்கில் இந்த பிறழ்வு வைரஸூக்கு சாதகமானதாக மாறிவிடுகிறது.

image

மனித நோயெதிர்ப்பு மண்டலத்துடன் போராடி மனித உயிர் அணுக்களுடன் எவ்வாறு இணைந்திருக்க வேண்டும் என்று கண்டறிய வைரஸ்களுக்கு நீண்ட காலமாகும். குறிப்பாக, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் கீமோதெரபிக்கு உட்பட்டவர்கள் உடலில் கொரோனா வைரஸ் நீண்ட காலம் தங்கியிருக்கும். அந்த சூழலில், கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்திருக்கலாம் என்று பெர்ன் பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணரான எம்மா ஹோட்கிராஃட் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏன் முக்கியம்?

கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவிக் கொண்டிருந்தால் மூன்று பிறழ்வுகளோடு நில்லாமல், அது மேலும் மாற்றமடைந்து தீவிரமானதாகவும் மோசமானதாகவும் மாறும். அதனால் தான் கொரோனா பிறழ்வைக் கட்டுப்படுத்த மக்களுக்கு விரைவாகத் தடுப்பூசி போடுவது முக்கியமானது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொற்று நோய் பரவலைக் குறைப்பதால் கொரோனா வைரஸை மரபியல் பிறழ்வடையும் வாய்ப்பையும் தடுத்து நிறுத்த முடியும் என்றும் வைரஸை எதிர்த்துப் போராட நமக்கிருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தாமதப்படுத்தினால் அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியது இருக்கும் என்றும் தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

image

சமீப காலம் வரை 60 முதல் 70 சதவிகிதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தினால், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால், மரபியல் மாற்றமடைந்த வைரசால் இது 85 - 90 சதவிகிதமாக மாறியுள்ளது. வைரஸ்களின் மரபியல் பிறழ்வு ஆண்டிபாடி அடிப்படை சிகிச்சைகளைப் பயனற்றதாக்கிவிடும், தடுப்பூசிகளின் செயல்திறனையும் கேள்விக்குறியாக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால், கொரோனா வைரஸின் மரபியல் பிறழ்வைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் தடுப்பூசி மட்டுமே தற்போதையை தீர்வு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments