உலகின் பணக்கார நகரம்... ஆனால், பசியில் வாடும் முதியவர்கள்... நியூயார்க்கின் இன்னொரு முகம்!

0 3067

கொரோனா நோய்த் தொற்று, பனி மற்றும் முதுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு பெரும்பாலான நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் அமெரிக்க முதியவர்களின் வீடு தேடிச் சென்று பசியாற்றி வருகிறது, சிட்டிமீல்ஸ் ஆன் வீல்சேர்ஸ் எனும் தொண்டு நிறுவனம்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் மக்களில் ஆறில் ஒருவர் 65 வயதைக் கடந்த முதியவர்களாக இருக்கிறார்கள். இது நியூயார்க் மாகாணத்தின் மக்கள் தொகையில் சுமார் 16 சதவிகிதம் ஆகும். கொரோனா பெருந்தொற்று, முதுமை காரணமாக முதியவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தனிமையில் வசிக்கும் பெரும்பாலான முதியவர்கள் தாமாக உணவு தயாரித்து உண்ண முடியாத நிலையிலும் இருக்கிறார்கள். இதனால், ஏற்கெனவே தனிமையில் வாடும் முதியவர்கள் பசியில் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நோய் பரவுவதற்கு முன்பே, நியூயார்க் நகரத்தில் பத்தில் ஒரு முதியவர் போதிய உணவு கிடைக்காமல் வாடிய நிலையில் தற்போது ஐந்தில் ஒருவர் பசிப் பிணியால் தவித்து வருகின்றனர். அதனால், அவர்களின் பசிப்பிணியைத் தீர்க்கும் விதத்தில் போக்கும் விதத்தில் சிட்டி மீல்ஸ் ஆன் வீல்சேர்ஸ் அமைப்பு ஒவ்வொரு நாளும் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று சுடச் சுட உணவை வழங்கி வருகிறார்கள்.

கொரோனா தொற்று நோய் பரவத் தொடங்கியதிலிருந்து சிட்டி மீல்ஸ் ஆன் வீல்சேர்ஸ் அமைப்பு சுமார் 25 லட்சம் பேருக்கும் மேல் உணவு வழங்கியுள்ளது. இது குறித்து சிட்டி மீல்ஸ் ஆன் வீல்சேர்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநர், பெத் ஷோபிரோ, “நியூயார்க்கில் தற்போது ஐந்தில் ஒரு முதியவருக்கு உணவு தேவைப்படுகிறது. தொற்றுநோய் பரவத் தொடங்கிய பிறகு ஒவ்வொரு நாளும் 50,000 பேர் வரை உணவு வழங்கி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் இருபது லட்சம் உணவு பொட்டலங்களை வழங்குகிறோம். அதில் 8,50,000 உணவுப் பொட்டலங்கள் அவசர கால உணவு ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து, 83 வயது ஐரீன் ரூடிஸ், “பெரும்பாலான நேரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் எனக்கு, அவர்கள் கொண்டுவரும் உணவுதான் என் பசியைப் போக்குகிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments