போலீசை வெட்டிய கொள்ளையர்களுக்கு மனிதாபிமான மாவுக்கட்டு..! என்கவுண்டர் தொடர்ச்சியாக..

0 9695
சீர்காழியில் நகை அடகுக்கடை உரிமையாளர் மனைவி மற்றும் மகனைக் கொன்றுவிட்டு, நகைகளைக் கொள்ளை அடித்ததோடு, பிடிக்கச்சென்ற போலீசாரை கையில் வெட்டிய இரு கொள்ளையர்களுக்கு கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

சீர்காழியில் நகை அடகுக்கடை உரிமையாளர் மனைவி மற்றும் மகனைக் கொன்றுவிட்டு, நகைகளைக் கொள்ளை அடித்ததோடு, பிடிக்கச்சென்ற போலீசாரை கையில் வெட்டிய இரு கொள்ளையர்களுக்கு கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளில் ஒருவன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டு உள்ளது.

கொள்ளைச் சம்பவத்தின் பின்னணி குறித்தும், அவர்களில் ஒருவனை என்கவுண்ட்டர் செய்தது ஏன்? என்பது குறித்தும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

கொள்ளையில் ஈடுபட்ட நபர்களில் மனீஷ் என்பவன் தன்ராஜ் செளத்ரியிடம் தங்க நகை வியாபாரம் செய்து வந்த ஜெயங்கொண்டம் நகைக்கடை உரிமையாளர் சங்கர்ராம் என்பவரிடம் வேலை செய்துள்ளான். அவன் சங்கர்ராமுடன் தன்ராஜ் சவுத்ரியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளான்.

இந்த நிலையில், தன்ராஜ் சவுத்ரி வீட்டில் அதிக அளவில் பணம் மற்றும் தங்க நகைகள் இருப்பதை அறிந்து கொண்ட மணீஷ், குறுகிய காலத்தில் முன்னேற வேண்டும் என்ற பணத்தாசையிலும், மற்றொரு கொள்ளையனான ரமேஷ்பட்டேலுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் செய்து இருந்ததால் பணத் தேவை ஏற்பட்டதாலும், இருவரும் சேர்ந்து ராஜஸ்தானில் இருந்து கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் தனது நண்பர்களான மகிபால், கருணாராம் ஆகிய இருவருடன் ஜனவரி 16ம் தேதி கொள்ளைத் திட்டம் தீட்டியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கருணாராம் மற்ற மூன்று பேரையும் தனது காரில் அழைத்து கொண்டு தன்ராஜ் சௌத்ரியின் வீட்டு வாசலில் அவர்களை இறக்கி விட்டு, சீர்காழி புறவழிச் சாலையில் காத்திருந்துள்ளான்.

அதனைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே நுழைந்தவர்கள் தன்ராஜ் செளவுத்ரின் மனைவி மற்றும் மகன் இருவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, போலி துப்பாக்கியைக் காட்டி வீட்டில் இருந்த 12 கிலோ தங்க நகைகள் மற்றும் 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு தப்பியுள்ளனர்.

இதனிடையே நீண்ட நேரம் புறவழிச்சாலையில் காத்திருந்த கருணாராம், பயத்தில் காரை எடுத்துக்கொண்டு கும்பகோணத்திற்கு திரும்பிச் சென்றுள்ளான். இதனையடுத்து கொள்ளையர்கள் தன்ராஜ் சௌத்ரியின் காரை எடுத்துக்கொண்டு தப்பி உள்ளனர்.

காரில் ஜிபிஎஸ் கருவி சிக்னல் காட்டி கொடுத்து விடும் என்று இடையில் சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள், சீர்காழி அருகே ஒலையம்புத்தூர் சாலையில் காரை நிறுத்தி விட்டு கொள்ளையடித்த நகைகளுடன் அருகிலிருந்த வயலில் இறங்கிச் சென்றுள்ளனர்.

சாலையின் மறுபக்கம் கரையில் உள்ள எருக்கூர் கிராமத்தில் வயலின் நடுவே பதுங்கிய கொள்ளையர்களைக் கண்ட கிராம மக்கள் தகவல் அளிக்க, அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மூவரில் மகிபாலை தங்கம் பதுக்கி வைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட பொறையார் காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவலர்கள் அழைத்து சென்றனர். அப்போது பையில் நகைப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியால் மகிபாலைத் தாக்கியதில் 2 காவலர்கள் காயமடைந்தனர்.

இதனால் தற்காப்பு கருதி காவல் ஆய்வாளர் சுட்டதில் காயமடைந்த மகிபாலையும் இரண்டு காவலர்களையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மூன்று பேரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மகிபால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இரு காவலர்களும் சிகிச்சை பெற்று வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தெரிவித்தார்

பாதுகாப்பிற்காக வைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் பதிவாகும் சேமிப்பு கருவியினை குற்ற சம்பவத்தில் ஈடுபடுவோர் எளிதில் கைப்பற்றும் வகையில் வைக்க வேண்டாம் எனவும், அதனை பாதுகாப்பான வேறொரு இடத்தில் வைத்து இணையத்தில் பதிவாகும் வகையில் அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்றும், அனைத்து நகைக் கடைகளிலும் செக்யூரிட்டி பணியமர்த்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.கொள்ளையர்களிடம் இருந்து நகை பணம் மீட்கப்பட்டது.

போலீசாரை தாக்கும் அளவுக்கு கொடூரமாக நடந்து கொண்ட கொள்ளையர்களில் ஒருவன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட, மீதம் உள்ள இரு கொள்ளையர்களின் போதாத காலம் காவல் நிலைய கழிவறைகளில் வழுக்கி விழுந்து கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

கொடூரக் கொலையாளிகள் என்றாலும் போலீசார் மனிதாபிமானத்துடன் அவர்களை தூக்கிச்சென்று கைகளுக்கு மாவுக்கட்டு போட்டு விட்டுள்ளனர்.

இதனிடையே கொலையாளிகளை காரில் ஏற்றி வந்து இறக்கிய கருணா ராமை கும்பகோணத்தில் வைத்து காவல் துறையினர் பிடித்தனர். அவனையும் வைதீஸ்வரன் கோயில் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மூன்று பேரும் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மயிலாடுதுறை விரைவு நீதிமன்ற நீதிபதி அமிர்தம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments