சவப்பெட்டியில் படுத்து எழுந்தால் கூரையைப் பிய்த்துக்கொண்டு செல்வம் கொட்டும்... தாய்லாந்தில் குவியும் பக்தர்கள்!

0 2327

தாய்லாந்து நாட்டில் உள்ள வாட் பங்னா நாய் கோயிலில்  உள்ள சவப்பெட்டியில் படுத்து மக்கள் வினோத வழிபாடு செய்து வருகின்றனர்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கின் புறநகர்ப் பகுதியில் உள்ளது வாட் பங்னா நாய் எனும் புத்த மதக் கோயில். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் வினோதமான வழிபாடு ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

அது என்னவென்றால், இந்த ஆலயத்தில் காலி சவப்பெட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கையில் பூ கொத்துடன் இந்த சவப்பெட்டிக்குள் இறங்கி மேற்கு நோக்கி தலையை வைத்துப் படுக்கின்றனர். அதன் பின் அந்த சவப்பெட்டியை வெள்ளைத் துணியால் மூடிவிடுகின்றனர். பின்னர், வெளியில் அமர்ந்திருக்கும் துறவிகள் மந்திரங்களை ஓத, சவப்பெட்டிக்குள் இருக்கும் பக்தர்கள் தீவிர பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். அதன் பிறகு பக்தர்கள் எழுந்து மீண்டும் கிழக்கு நோக்கித் தலையை வைத்துப் படுத்து பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு மேற்கு, கிழக்கு என்று திசை மாறிப் படுப்பது மறுபிறவியைக் குறிக்கிறது என்றும் இவ்வாறு வழிபாடு செய்வதினால் புதிதாகப் பிறக்கிறோம் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மேலும், வறுமை நீங்கி, செல்வச் செழிப்போடு வாழலாம் என்றும் நம்பப்படுகிறது. கொரோனா நோய்த் தொற்றினால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், நம்பிக்கையுடன் பலரும் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து செல்கின்றனர்.

தாய்லாந்து சமூக வலைத்தளங்களில் இந்த வழிபாட்டு முறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தபோதும், சவப்பெட்டி வழிபாட்டிற்கான மவுசு சிறிதும் குறையவில்லை .

இந்த வழிபாடு குறித்து வாட் பங்னா நாய் கோயிலின் துறவி ஒருவர் கூறுகையில், மரணம் என்பது மனித வாழ்க்கையில் நிச்சயமான ஒன்று, எனவே வாழும் வாழ்க்கையில் கவனம் செலுத்தி முறையாக வாழ வேண்டும் என்பதன் தாத்பரியமாகவே இந்த வழிபாடு செய்யப்படுவதாகக் கூறியுள்ளார். பக்தர்கள் சவப்பெட்டிக்குள் இறங்கி ஏறினால் வாழ்வில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments