100 கார்கள், 15 மாட்டு வண்டிகளில் சீர்... கிழக்கு சீமையிலே படத்தை மிஞ்சிய தாய்மாமன்!

0 312116

ரோடு மாவட்டத்தில் ஊரார் அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் வண்ணம், தங்கை மகள்களுக்குப் பாரம்பரிய முறைப்படி 15 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மற்றும் சுமார் நூறு கார்களில் உற்றார் உறவினர் புடைசூழ தாய் மாமன் சீர் கொண்டு சென்று அசத்தியுள்ளார்.

தாய்மாமன் உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மரபு, தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களில் ஒன்றாகும். நகரமயமாதல் மற்றும் நவீன வாழ்க்கை முறையில் மங்கி வரும் அந்த உறவுமுறையைப் பாரம்பரிய முறையோடு மீட்டெடுத்துள்ளார், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை நடத்திவரும் ராஜா.

image

மருத்துவர் ராஜாவின் தங்கையான மோகனப் பிரியாவுக்குத் திருமணமாகி ரிதன்யா, மித்ராஸ்ரீ என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த இரு பெண்களும் பூப்பெய்து விடவே இருவருக்கும் சடங்கு செய்யும் நிகழ்வு கள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டது.

இந்த விழாவிற்கு தாய் மாமன் சீதனம் அளிக்கும் வழக்கப்படி தாய் மாமனான ராஜா தங்கையின் மகள்களுக்கு சிறப்பான முறையில் சீர் செய்யத் திட்டமிட்டார். பாரம்பரிய முறைப்படி அனைவரும் வியக்கும் வண்ணம் அமையவேண்டும் என்ற எண்ணத்தில் 100 க்கும் மேற்பட்ட தட்டுகளில் சீர் வகைகளை 15 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் உற்றார் உறவினர்கள் புடைசூழ கோபிசெட்டிபாளையத்திலிருந்து கள்ளிப்பட்டியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு மருத்துவரான ராஜாவே மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார்.

அவருக்குப் பின்னால் உறவினர்கள் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளிலும் 100 க்கும் மேற்பட்ட கார்களிலும் பின்னால் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாட்டு வண்டியில் தாய் மாமன் சீர் கொண்டு சென்றதை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடனும் ஆச்சர்யத்துடனும் பார்த்து வியந்தனர்.

விழா நடைபெற்ற விவசாய தோட்டத்தில் தென்னை ஓலையில் வேய்ந்த குடிசையில் பாரம்பரிய ரக நெல் மணிகளைக் கொட்டி அதில் வைத்த சீர் வரிசைத் தட்டுகளும் ஊரார் கண்படும் அளவுக்கு இருந்தன. அதேபோல் பித்தளை பாத்திரங்களில் பாரம்பரிய உணவு வகைகள் சமைத்துப் பரிமாறப்பட்டன. தாய்மாமன் சீராகக் கொண்டுவந்த காங்கேயம் காளைகள், வெள்ளாடுகள் போன்றவை பலரையும் வெகுவாகக் கவர்ந்தன.

இது குறித்து தாய்மாமன் ராஜா, பாரம்பரியத்தைப் பறைசாற்றவும் வருங்கால சன்னதிகளுக்குப் பாரம்பரியத்தை நினைவு கூறவும் பாரம்பரிய முறைப்படி தனது தங்கை மகள்களுக்குப் பூப்பு நன்னீராட்டு விழா நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பூப்பு நன்னீராட்டு விழா நிகழ்விற்கு வந்திருந்தவர்கள் விழா முடிந்து வெளியில் செல்லும் போது கிராமப்புற திருவிழாவிற்கு வந்து சென்றது போன்ற உணர்வுடன் சென்றது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


  • kathiresan n s

    அற்புதம் மிக அருமையான செய்திகள்