முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசம்! - அழிவை நோக்கிச் செல்கிறதா உலகம்?

0 10218

1990 ம் ஆண்டுகளின் மத்திய காலகட்டத்தை விடவும் தற்போது பனி வேகமாக உருகி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் கால நிலை மாற்றம் ஏற்பட்டு புவியின் வெப்ப நிலை இதுவரை இல்லாத அளவுக்கு உயரும் என்றும் இதனால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் உலக நாடுகளை எச்சரித்துள்ளனர்.

1990 க்குப் பிறகு புவியில் 28 ட்ரில்லியன் மெட்ரிக் டன் அளவுக்குக் கடல் பனிப் பாறைகள் உருகியுள்ளது. ஆண்டுதோறும் பனிக்கட்டி உருகும் விகிதமானது 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடவும் தற்போது 57 சதவிகிதம் வேகமாக உள்ளது என்று தி க்ரியோஸ்பியர் (( The Cryosphere)) இதழில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த முப்பது ஆண்டுகளில் அண்டார்டிகா, கிரீன்லாந்து மற்றும் மலைச் சிகரங்களில் உள்ள பனிப் பாறைகளில் உருகியுள்ள நீரால் கடல் மட்டம் 3.5 செ.மீ உயர்ந்துள்ளது என்றும் ஒவ்வொரு ஆண்டும் மலைப் பனிப் பாறைகள் 22 சதவிகிதத்தை இழந்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆர்க்டிக் பகுதியில் உள்ள கடல் பனி வரலாறு காணாத அளவுக்குச் சுருங்கியுள்ளது. இதனால், கடல் பனி முழுவதும் மறைந்து கடலின் இருண்ட நீர் வெளிப்படத் தொடங்கியுள்ளது. இதனால், பனிக்கட்டிகள் மூலம் சூரிய வெப்பம் விண்வெளிக்குத் திருப்பி அனுப்பப்படுவது குறைந்து, கடல் நீரால் அதிகமாக உறிஞ்சப்பட்டு புவியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொழில் துறைக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் உலக வளிமண்டல வெப்பநிலையானது தற்போது 1.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், ஆர்க்டிக் பகுதியில் வெப்பமயமாதல் விகிதம் கடந்த 30 ஆண்டுகளில் உலக சராசரியை விடவும் இரண்டு மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது. 1994 முதல் 2017 ம் ஆண்டுகளுக்குட்பட்ட செயற்கைக்கோள் தரவுகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்கையில், 1990 களில் ஆண்டுக்கு சராசரியாக 0.8 டிரில்லியன் மெட்ரிக் டன் பனி இழப்பு ஏற்பட்டு வந்த நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் 1.2 டிரில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

காலநிலை மாற்றத்தைக் கையாள்வதற்கு 2030 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை தீர்வுகள் மற்றும் திட்டங்கள் வகுப்பதை நோக்கமாகக் கொண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற மெய் நிகர் உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட நிலையில் இந்த ஆராய்ச்சி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பனி உருகுதல் இதே வேகத்தில் நீடித்தால் மனித குலத்துக்கு மட்டுமல்லாமல் புவியில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் மாபெரும் சிக்கலை உருவாக்கிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments