’அம்மாடியோ’ என சொல்லும் வண்ணம், தங்கை மகளுக்கு சீர் செய்த தாய்மாமன்..!
ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் ஊரார் மூக்கில் விரல் வைக்கும் வண்ணம், தங்கை மகளுக்கு பாரம்பரிய முறைப்படி 15க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் உற்றார் உறவினர் புடைசூழ தாய் மாமன் சீர் கொண்டு சென்று ஒருவர் அசத்தியுள்ளார்.
தாய்மாமன் உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மரபு, தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களில் ஒன்று. நகரமயமாதல், நவீன வாழ்க்கை முறையில் மங்கி வரும் அந்த உறவுமுறையை பாரம்பரிய முறையோடு மீட்டெடுத்துள்ளார், ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை நடத்திவரும் ராஜா.
தங்கை மகள்கள் இருவரின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு, 100க்கும் மேற்பட்ட தட்டுகளில் வரிசை வைத்து, 15க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் உற்றார் உறவினர் புடைசூழ கோபிசெட்டிபாளைத்திலிருந்து கள்ளிப்பட்டியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சீர் கொண்டு சென்றார்.
விழா நடைபெற்ற விவசாய தோட்டத்தில் தென்னை ஓலையில் வேய்ந்த அழகு பொருட்களும் ஓலைக் குடிசையும், பாரம்பரிய ரக நெல் மணிகளை கொட்டி அதில் வைத்த சீர் வரிசைத் தட்டுகளும் ஊரார் கண்படும் அளவுக்கு இருந்தன.
பித்தளை பாத்திரங்களில் சமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டு, மண்ணின் மணம் கமழ காங்கேயம் காளைகளும் வெள்ளாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன.
Comments