திருமண நாளில் தவறவிட்ட 50 பவுன் நகை... குண்டுமணி குறையாமல் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!
தன் ஆட்டோவில் தவறவிட்ட 50 பவுன் நகைகளை அரை மணி நேரத்தில் போலீஸார் முன்னிலையில் உரிமையாளரிடத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
குரோம்பேட்டையை சேர்ந்தவர் பால் பிரைட். இவர், வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். பால் பிரைட்டின் மகள் திருமணம் அங்குள்ள ஆலயத்தில் 27 ஆம் தேதி நடைபெற்றது. மாலை பல்லாவரத்தில் திருமண வரவேற்பு நடைபெற இருந்தது. ஆலயத்தில் திருமணம் முடிந்ததும் அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் பால் பிரைட் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, தன் மகளின் திருமணத்துக்காக வாங்கிய 50 பவுன் நகைகளை கைப் பையில் வைத்திருந்துள்ளார். பின்னர், வீட்டில் இறங்கும் போது பையை எடுக்க மறந்து விட்டார். ஆட்டோ டிரைவரும் இதை கவனிக்கவில்லை. வீட்டுக்கு சென்ற பிறகுதான் பால் பிரைட், நகை பையை ஆட்டோவில் விட்டு விட்டது தெரிய வந்தது. பதறி போன பால் பிரைட், உடனடியாக குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்று கொண்ட போலீசார், நகையை தவறவிட்ட ஆட்டோவை தேடி கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் ஆட்டோவில் ஒரு பை இருப்பதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணகுமார், அதை திறந்து பார்த்துள்ளார். பையில் தங்க நகைகள் இருப்பதை அறிந்த அவர் பையை குரோம்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைப்பதற்காக வந்தார். நகையை பறிக்கொடுத்த நின்று கொண்டிருந்த பால் பிரைட்டும் போலீஸ் நிலையத்தில்தான் இருந்தார். உடனடியாக போலீஸாரிடத்தில் சரவண குமார் நகை பையை ஒப்படைத்தார்.
மகளின் திருமணத்தன்று 50 சவரன் நகை பறிகொடுத்து தவித்த பால் பிரைட்டிடத்தில் பின்னர் நகை பை ஒப்படைக்கப்பட்டது. நேர்மையான ஆட்டோ ஓட்டுநர் சரவண குமாரை குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் கோமதி, உதவி ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் பாராட்டி வெகுமதி அளித்தனர்.
Comments