வசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..! ஆடிப்போன தியேட்டர் அதிபர்ஸ்
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக திரையரங்கு உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் 29ந்தேதி அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு வசூல் கணக்கில் தில்லு முல்லு நடந்ததாக கூறப்படும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
மாஸ்டர் படம் வெளியான 10 நாட்களில் வசூல் 200 கோடி ரூபாயை கடந்து விட்டது என்றும் திரையரங்கில் தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதுவதாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்..!
கொரோனா அச்சத்தை போக்கி தங்கள் திரையரங்குகளுக்கு மக்களை குடும்பம் குடும்பமாக கொண்டு வந்ததற்காக நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் லலித்தை திரையரங்கு உரிமையாளர்கள் பாராட்டி வந்தனர்.
பிப்ரவரி 1ந்தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், வருகிற 29 ந்தேதி மாஸ்டர் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக அறிவித்து தன்னை பாராட்டிய திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் தயாரிப்பாளர் லலித்..!
திரையரங்குகளில் வசூலை வாரி குவிப்பதாக கொண்டாடப்பட்ட மாஸ்டர் படத்தை இவ்வளவு அவசரமாக ஓடிடியில் வெளியிட என்ன காரணம் ? என்று விசாரித்தால் வழக்கம் போல மாஸ்டர் படம் ஓடும் சில திரையரங்கு உரிமையாளர்கள் முறையாக வசூல் கணக்கை காட்டாமல் தில்லு முல்லு செய்திருப்பதால் ஏற்பட்ட இழப்பே காரணம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
50 சதவீத இருக்கை மட்டுமே அனுமதி என்ற உத்தரவு அமலில் இருந்த நிலையில் நகர்புறம் தவிர்த்து பெரும்பாலான ஊர்களில் மாஸ்டர் படத்திற்கு 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் திரையரங்கு நிர்வாகத்தினரோ 50 சதவீதம் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதாக கூறி தயாரிப்பாளருக்கு கணக்கு காட்டியதாக சொல்லப்படுகின்றது.
அதே போல சில திரையரங்குகள் 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்ற நிலையில் தயாரிப்பாளருக்கு வழக்கமான டிக்கெட் கட்டண பங்கு மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது என்கின்றனர். இதன் மூலம் மாஸ்டர் தயாரிப்பாளருக்கு வரவேண்டிய பங்கு தொகையில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் மாஸ்டர் படம் 200 கோடியை கடந்து விட்டதாக டுவிட்டரில் பலர் படம் ஓட்டினாலும் தற்போது வரை மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ள திரையரங்கு பங்கு தொகை 60 கோடி ரூபாய் மட்டுமே என்று கூறப்படுகின்றது.
தற்போது திரையரங்குகளில் கூட்டம் குறைய தொடங்கிய நிலையில் நல்ல விலைக்கு அமேசான் பிரைம் கேட்டதால் உடனடியாக படத்தை வெளியிட ஒப்புக் கொண்டுள்ளார் தயாரிப்பாளர் லலித் என்று கூறப்படுகின்றது. ஓடிடி மூலம் மட்டும் மாஸ்டர் தயாரிப்பாளருக்கு கூடுதலாக 20 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் இது குறித்து கேட்ட போது, மாஸ்டர் தயாரிப்பாளரே நேரடியாக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டதோடு, வசூலை கண்காணிக்க திரையரங்கிற்கு இருவர் என ஆட்களையும் நியமித்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் எப்படி பொய் கணக்கு காண்பிக்க முடியும் ? என்று கேள்வி எழுப்பினார் ? என்ன வசூலானதோ அதை தானே கொடுக்க முடியும் ,உண்மையான வசூல், சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும் என்று சுட்டிக்காட்டிய திருப்பூர் சுப்பிரமணியம் இது தொடர்பாக அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுடன் சூம் ஆப் மூலம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த 10 நாட்களில் மட்டும் ரசிகர்களிடம் இருந்து பாப்கார்ன், சமோசா, கூல்டிரிங்ஸ் விற்பனையில் மட்டும் திரையரங்குகள் 50 கோடி ரூபாய்க்கும் மேல் அள்ளியதாக தகவல் வெளியாகி உள்ளது..!
Comments