ஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு!
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எரிமலைகள் நிறைந்த லெஸ்போஸ் தீவில் மண்ணில் புதைந்த, 2 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல் மரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிரேக்க நாட்டில் உள்ளது லெஸ்போஸ் (Lesbos) தீவு. இந்தத் தீவில் சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடித்ததால் வனத்திலிருந்த மரங்களும் உயிரினங்களும் எரிமலை சாம்பலில் புதையுண்டன. இங்குள்ள 15 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பழங்கால புதையுண்ட காடு யுனெஸ்கோ (UNESCO) பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்மையில் இங்கு நடைபெற்ற சாலைப் பணியின்போது 19 அடி நீளம் உள்ள புதை படிவ கல் மரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இரண்டு கோடி ஆண்டுகள் கடந்த பின்பும் இந்த மரத்தின் வேர்கள் மற்றும் கிளைகள் இன்னும் அப்படியே சிதைவடையாமல் இருப்பது தான். இரண்டு கோடி ஆண்டுகளாக இந்த மரம், எரிமலை சாம்பல் கொண்டு மூடப்பட்டிருந்ததால், பாதுகாப்பாக இருந்ததாகவும் இது போன்று முழுமையான கல் மரம் கிடைப்பது அரிதானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1995 முதல் லெஸ்போஸ் வனத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு வரும் நிலையில், பல விலங்குகளின் எலும்புகளும் இந்த காட்டில் புதையுண்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கல் மரத்தின் மூலம் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சுற்றுச்சூழல் அமைப்பைக் கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். மேலும், இந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மரங்கள் மற்றும் விலங்குகளின் எலும்புகளைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கவும் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
Comments