பழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை!

0 16550
பழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை!

றுபது, எழுபது வயதைக் கடந்த பிறகும், திடகார்த்தமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர்களின், ஆரோக்கிய ரகசியம் குறித்துக் கேட்டுப் பார்த்தால் தயங்காமல் பதில் சொல்வர் பழைய சோறும் பச்சை மிளகாயும்தான் என்று. நம் முன்னோர்களின் உடல் நலத்துக்குத் துணையாக இருந்த பழைய சோறை இன்று நம்மில் பலரும் மறந்துவிட்டோம்.

ஆனால், பழைய சோறை தினமும் காலையில் உண்டால், குடல் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது என்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருவதாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு காலத்தில் காலை உணவு என்றாலே பழைய சோறுதான் என்ற நிலை மாறி, இப்போது இட்லி, தோசை, பிசா, பர்கர், பிரட் ஆம்லெட் என்று நவீன கால உணவு முறைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். இதனால், குடலுக்குக் கிடைக்க வேண்டிய தாது, இரும்பு, நார் சத்து மட்டுமல்லாமல் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களும் கிடைக்காத காரணத்தால், குடல் சார்ந்த பிரச்னைகள், மலச்சிக்கல், தூக்கமின்மை, செரிமான கோளாறு, மன அழுத்தம் என்று பல்வேறு நோய்கள் நம்மைத் தேடி, அழையா விருந்தாளியாக வந்து சேர்கின்றன.

இந்த சூழலில், நம் முன்னோர்கள் தினமும் உண்டு வந்த பழைய சோறின் மகத்துவத்தைக் கண்டுபிடித்துள்ளனர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள். அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் குடல் சார்ந்த பிரச்னைகளுக்காக வரும் நோயாளிகளைக் கொண்டு பழைய சோறு குறித்த ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.

அந்த ஆராய்ச்சியில், நாம் சாதாரணமாக நினைக்கும் பழைய சோறில் உடலுக்கு நன்மை பயக்கும் லாக்டோ பேசிலஸ், ஈஸ்ட், பைடோ பேக்டிரியல், ஸ்டெப்சோ, சேக்ரோ மைசிஸ் ஆகிய நுண்ணியிர்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். நம் உணவில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் இல்லாததினால் தான் பலவித குடல் சார்ந்த வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

பழைய சோறு மூலம் கிடைக்கப்பெறும் பாக்டீரியாக்கள் மூலம் பலரது குடல் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குடல் சார்ந்த நோய் மட்டுமல்லாமல், தற்கால மனிதர்களை ஆட்டிப்படைத்து வரும் நீரிழிவு நோய்க்கும் பழைய சோறு அருமருந்தாகச் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய சோறில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாவால் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவு அதிகரித்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறைக்கு, அரசு 2.7 கோடி நிதி ஒதுக்கி, பழைய சோறில், மேலும் நன்மை பயக்கும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்து ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல maldi-tof என்ற இயந்திரமும் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ... நவீன கால வாழ்க்கையில் மறக்கடிக்கப்பட்ட நன்மை பயக்கும் பழைய சோறை மீண்டும் நினைவுகொள்ள வைத்துள்ளது இந்தப் புதிய ஆராய்ச்சி முடிவு. தினமும் காலை உணவாகப் பழைய சோறு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை உண்டு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாண்போம்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments