டெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன

0 8268
டெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 200க்கும் மேற்பட்டோரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், போராட்டத்தில் இருந்து விலகி கொள்வதாக 2 சங்கங்கள் அறிவித்துள்ளன. 

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை மூண்டது. இதில் போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

கூடுதல் காவல் ஆணையர் ஒருவரை வாளால் தாக்கியுள்ளனர். வன்முறை தொடர்பாக கொலை முயற்சி, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல், பயங்கர ஆயுதங்களால் அரசு பணியாளர்களை தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 22 வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக இருநூறுக்கும் மேற்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ராஷ்டிரிய கிசான் மஸ்தூர் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சிங் அறிவித்தார். போராட்டத்தை திசை திருப்ப சிலர் முயற்சிக்கும் நிலையில், இனியும் அதனை தொடர முடியாது என்று தெரிவித்தார்.

குடியரசு நாளில் டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் வேதனை அளிப்பதாகவும், எனவே 58 நாள் போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்வதாகவும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் தாகூர் பானு பிரதாப் சிங் தெரிவித்தார்.

இந்த நிலையில் பேரணியின் போது காவல்துறை வாகனம் மீது டிராக்டரை மோதியும், கம்புகளாலும் போராட்டக்காரர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

காவல்துறையினரிடம் இருந்து கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்க வைக்கும் துப்பாக்கியை ஒருவர் பறித்து வைத்திருந்த புகைப்படமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் படேல், அந்த பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனிடையே குடியரசு தின வன்முறை சம்பவம் தொடர்பாக, தவறான கருத்துகளை பதிவிட்டது தொடர்பாக 550க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக ரத்து செய்திருப்பதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments