அமேசான் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் இடையே விண்வெளி இணையதள சேவை குறித்து வலுக்கும் போட்டி

0 1531

ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் அமேசான் இடையேயான போட்டி வலுத்து வருகிறது. இரு நிறுவனங்களும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் , ஸ்டார்லிங்க் என்ற இணையதள சேவையை வழங்கி வருகிறது. உலக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டார்லிங்க் திட்டம் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. கேபிள்கள் உதவி இல்லாமல் செயற்கைகோள்கள் கொண்டு விண்ணிலிருந்து பூமிக்கு இணையதள சேவை வழங்குவதே ஸ்டார்லிங்க் திட்டமாகும். இதற்காக, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் இது வரை 900 செயற்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடாவில் உள்ள சில பகுதிகளில் தற்போது ஸ்டார்லிங்க் திட்டம் மூலம் இணையதள சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த செயற்கைகோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் நிலையில், சுற்றுப்பாதையை மாற்றுவதற்கான அனுமதி வேண்டி பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது. அதாவது, முன்பு திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையை விட இன்னும் கீழ் உள்ள சுற்றுப்பாதைக்கு செயற்கைகோள்களை மாற்றக்கோரி ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் கேட்டுள்ளது. இவ்வாறு மாற்றுவதால், பூமிக்கு அருகில் செயற்கைகோள்கள் இருக்கும். இதனால் சிக்னல் வலுவாக இருக்கும்.

இதற்கிடையே ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவன செயற்கைகோள்களின் சுற்றுப்பாதையை மாற்றுவதற்கான அனுமதியை வழங்க கூடாது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்டார்லிங்க் போல அமேசான் நிறுவனம் கைபர் திட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறது. அதன் அடிப்படையில், செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவன செயற்கை கோள்களின் சுற்றுப்பாதையை மாற்ற அனுமதி வழங்கப்பட்டால், ஸ்பேஸ்-எக்ஸ் செயற்கைக்கோள்கள் அமேசான் செயற்கைகோள்களுடன் மோதும் அபாயம் உள்ளதாக அமேசான் நிறுவனம் கூறியுள்ளது. மேலும், சுற்றுபாதை மாற்றப்பட்டால், ஸ்பேஸ்-எக்ஸ் செயற்கைகோள்களின்  சிக்னல் மற்ற செயற்கைகோள்கள் உருவாக்கும் சிக்னலுடன் தலையிட்டு , வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.

இதனையடுத்து டுவிட்டரில் தன் கருத்தை பதிவு செய்துள்ள எலான் மஸ்க் , அமேசானின் செயற்கைகோள்கள் செயல்பாட்டுக்கு  வர பல ஆண்டு காலம் இருப்பதாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments