சென்னை மெரினா கடற்கரையில், ஜெயலலிதா நினைவிடம் இன்று திறப்பு..!
சென்னை மெரினா கடற்கரையில், பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்.
சென்னை மெரினா கடற்கரையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட இரண்டாண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டு, பொதுப்பணித்துறை மூலமாக பணிகள் நடைபெற்று வந்தன. 50 ஆயிரத்து, 422 சதுர அடி பரப்பளவிலான அந்த நினைவிடத்தில் மூன்று கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் பீனிக்ஸ் பறவை தோற்றத்திற்குள் அமைந்துள்ளது. இடதுபுறம் அருங்காட்சியகமும், வலதுபுறம் அறிவுசார் மையமும் இடம் பெற்றுள்ளன.
நினைவிடத்தில் 'மக்களால் நான்; மக்களுக்காக நான், அமைதி, வளம், வளர்ச்சி' ஆகிய வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. புல்வெளி அமைக்கப்பட்டு நினைவிட வளாகத்தில் ஏராளமான மலர் செடிகள் நடப்பட்டுள்ளன. இரவிலும் நினைவிடம் ஜொலிக்கும் வகையில், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 11 மணியளவில் திறந்து வைக்கிறார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். ஜெயலலிதா நினைவிடத் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுகவினர் சென்னை வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரையிலிருந்து 2000 பேர் ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர். ரயில் நிலையத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து திரளான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.
Comments