தமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாய அமைப்பினர், அரசியல் கட்சிகள் சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. அனுமதியின்றி பேரணி நடத்த முயற்சித்ததால், போராட்டக்காரர்களுக்கும் - போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பலவேறு பகுதிகளில் இருந்து டிராக்டரில் வந்த விவசாயிகளை, போலீசாரின் தடுப்புகளை வைத்து தடுத்தனர். டிராக்டர்கள் மூலம் தடுப்புகள் தகர்த்துக்கொண்டு விவசாயிகள் முன்னேற முயன்ற போது, தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. பெண் காவலர் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
திருச்சியில் இருசக்கர வாகன பேரணி செல்ல முயன்ற சுமார் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், வாக்குவாதம் ஏற்பட்டது.
தஞ்சையில் பேரணி நடத்த முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்ததால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இதனால் தஞ்சை திருச்சி புதுக்கோட்டை இடையிலான சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது.
கரூரில் பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் தேசியக் கொடியுடன் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.
கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
நாகையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது
இதேபோன்று, தேனி, சேலம், கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றது.
Comments