நாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா
நாட்டின் 72வது குடியரசு தினமான இன்று, டெல்லி ராஜபாதையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றினார். ரஃபேல் விமானங்கள், டி-90 டாங்குகள், பிரம்மோஸ் ஏவுகணைகள், பினாகா ஏவுகணை ஏவும் அமைப்புகள் என இந்தியாவின் வல்லமையை வெளிப்படுத்தும் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசு தின அணிவகுப்பு வரலாற்றில் முதல்முறையாக 2 பெண் விமானிகள், வங்கதேச முப்படை வீரர்கள் பங்கேற்றனர்.
குடியரசு தின விழாவின் முதல் நிகழ்வாக போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து, மவுன அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதைக்கு சென்ற பிரதமரை முப்படை தளபதிகள் வரவேற்றனர். விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ராம்நாத் கோவிந்த், குதிரைப் படை வீரர்கள் சூழ புறப்பட்டு வந்தார். அவரை பிரதமர் மோடி வரவேற்று, அதன்பின் முப்படை தளபதிகளை அறிமுகப்படுத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அணிவகுப்பு குழுக்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதோடு, வழக்கமாக செங்கோட்டை வரை செல்லும் அணி வகுப்பு, நேஷனல் ஸ்டேடியம் பகுதியோடு முடித்துக் கொள்ளப்பட்டது. முதல் முறையாக, வங்கதேச முப்படைகளில் இருந்து 122 வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
டி-90 பீஷ்மா டாங்குகள், பிரம்மோஸ் ஏவுகணை அமைப்புகள், பினாகா ஏவுகணை ஏவும் அமைப்புகள், டிஜிட்டல் கட்டுப்பாட்டில் விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட, ராடார் முறையால் வழிநடத்தப்படும் Schilka weapon system, உடனடி பாலங்களை அமைக்கும் திறன் கொண்ட டி-72 டாங்குகள் உள்ளிட்டவை அணி வகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.
கடற்படையினரின் இசையுடன் கூடிய அணிவகுப்பு, சிஆர்பிஎஃப், என்எஸ்ஜி, என்சிசி அணிவகுப்புகள் கண்ணைக் கவரும் வகையில் இருந்தன.
குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக 2 பெண் விமானிகள் இடம்பெற்றனர். ஃபிளைட் லெப்டினென்ட் ((Flight Lieutenant)) பாவனா காந்த், விமானப் படை அணிவகுப்பில் கம்பீரமாக இடம்பெற்றார்.
இதேபோல ஃபிளைட் லெப்டினென்ட் சுவாதி ரத்தோர், ராஜபாதை மீது பறந்த 4 ஹெலிகாப்டர் அணிவகுப்பில் இடம்பெற்றார்.
மாநிலங்களின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு கண்ணைக் கவரும் வகையில் நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் ஊர்தி முதலில் வந்தது.
உத்தரப்பிரதேசத்தின் ஊர்தியில், அயோத்தியில் புதிதாக கட்டப்படும் ராமர் கோவில் மாதிரி இடம்பெற்றது.
பஞ்சாப், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா என ஒவ்வொரு மாநிலங்களின் ஊர்தியும் தனித்துவத்தோடு அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், கொரோனா தடுப்பூசியை எடுத்துக் காட்டும் உயிரிதொழில்நுட்பத் துறை, டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியாவை உணர்த்தும் தகவல் தொழில்நுட்பத்துறை ஊர்திகளும் கவனம் பெற்றன.
தமிழகத்தின் ஊர்தியில் பெண்கள் பரத நாட்டிம் ஆடியபடி சென்றனர்.
விமானப்படை சார்பில் ருத்ரா, திரிசூல வடிவில் வானில் அணிவகுத்த விமானங்களும், ஹெலிகாப்டர்களும் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தன.
இறுதியாக, 2 ஜாகுவார், 2 மிக்-29 விமானங்கள் புடைசூழ, புதிதாக விமானப் படையில் இணைக்கப்பட்ட ஒரு ரஃபேல் விமானம், வானில் வல்லமையை வெளிப்படுத்தியது.
குடியரசு தின விழாவில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணியில் 6 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். வழக்கமாக ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், கொரோனா கால நெறிமுறைகளை பின்பற்றி 25 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
Comments