'பாப்பம்மாள் பாட்டி எங்கள் கிராமத்துக்கு கிடைத்த வரம்!'- தேக்கம்பட்டி மக்கள் நெகிழ்ச்சி

0 9988

105 வயதிலும் விவசாய களத்தில் கலக்கும்  பாப்பம்மாள் பாட்டிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள். தேக்கம்பட்டி மக்களால் பாப்பம்மாள் பாட்டி என்று பாசமுடன் அழைக்கப்படும் இவருக்கு வயதோ 105 .

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த பாப்பம்மாள் தன் பாட்டியுடன் தேக்கம்பட்டி கிராமத்தில் வளர்ந்தார்.  பாட்டியின் இறப்பிற்கு பிறகு பாப்பம்மாள் பாட்டி சிறிய கடை ஒன்றை நடத்தி வந்தார். சிறு வயது முதல் விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் உடைய பாப்பம்மாள் பாட்டி, தன் கடையில் வரும் வருமானத்தை சேமித்து 10 ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்து வந்தார் .பின்பு 10 ஏக்கர் நிலத்தை அவரால் நிர்வாகம் செய்ய இயலாத காரணத்தால் விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக 2 ஏக்கர் நிலத்தை மட்டும் வைத்து கொண்டு மீதி நிலத்தை விற்று விட்டார் பாப்பம்மாள் பாட்டி.

ஆனால் சுருங்கிய தோலும், நரை முடியும் அவரது கடின உழைப்பிற்கு தடையாக நிற்கவில்லை.இன்றும் அந்த 2 ஏக்கர் நிலத்தில்அவரே  தினம்தோறும் விவசாயம் செய்து வருகிறார். தேக்கம்பட்டி கிராமத்தில் பல இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் பாப்பம்மாள் பாட்டி, விவசாயம் மட்டும் அல்ல மக்கள் சேவையிலும் ஈடுபட்டுள்ளார்.

பாப்பம்மாள் பாட்டியை கௌரவிக்கும் விதமாக, 72 ஆவது குடியரசு தின விழாவான இன்று மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது

80 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து விவசாயம் செய்து வருவதால் பாப்பம்மாள் பாட்டிக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. தங்கள் ஊர் செல்ல பாட்டிக்கு விருது கிடைத்துள்ளதால், தேக்கம்பட்டி கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் பாப்பம்மாள் பாட்டி வீட்டுக்கு சென்று அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும், பாப்பம்மாள் பாட்டியால் தங்கள் கிராமமே பெருமை அடைந்துள்ளதாக ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பாப்பம்மாள் பாட்டி கூறுகையில், தனக்கு வழங்கப்பட்ட இந்த விருது அனைத்து விவசாயிகளுக்குமானது. தனக்கு வழங்கியதை போல, மத்திய அரசு விருதுகள் வழங்கி ஊக்குவித்தால் விவசாயத்தில் மக்களுக்கு ஆர்வம் பெருகி விவசாயம் செழிக்கும் என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments