சர்ச்சையான சுபாஷ் சந்திர போஸின் ஓவியம்..விளக்கம் அளித்த நேதாஜியின் மருமகன்
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த திறந்து வைத்த இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஓவியம் குறித்த சர்ச்சைக்கு அவர் மருமகனும், பா. ஜ. க உறுப்பினருமான சந்திர குமார் போஸ் விளக்கம் அளித்துள்ளார்
கடந்த ஜனவரி 23 ஆம் தேதி சுபாஷ் சந்திர போஸின் 125 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, நேதாஜிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் பிறந்தநாளை "பராக்கிரம டிவாஸ் " என்று மத்திய அரசு அறிவித்தது.
நேதாஜியின் பிறந்தநாளையொட்டி, புது டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், சுபாஷ் சந்திர போஸின் ஓவியம் ஒன்றை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
இந்த படம் இணையத்தளத்தில் வைரல் ஆக தொடங்கிய பின், பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. குடியரசு தலைவரால் திறந்து வைக்கப்பட்ட ஓவியம் நேதாஜியின் படம் இல்லை என்று பலரும் குற்றம்சாட்ட தொடங்கினர். மேலும் அந்த ஓவியம் கும்னாமி திரைப்படத்தில் நடித்த வங்க மொழி நடிகர் புரோசென்ஜித் சாட்டர்ஜியின் படம் என்றும் கூறப்பட்டது. கும்னாமி திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு வங்க மொழி படம். நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் விதமாக அந்த படம் எடுக்கப்பட்டது.
நேதாஜியின் சர்ச்சைக்குரிய ஓவியம் குறித்து நேதாஜியின் மருமகனும், பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்க உறுப்பினருமான சந்திர குமார் போஸ் விளக்கம் அளித்துள்ளார்.
குடியரசு தலைவர் திறந்து வைத்த ஓவியம், பத்மஸ்ரீ விருது வென்ற ஓவியர் பரேஷ் மைதி கொண்டு வரையப்பட்டது எனவும், சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரிடம் இருந்து அவரது புகைப்படத்தை பெற்று தான் அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது எனவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். அந்த பதிவுடன், நேதாஜியின் புகைப்படம் ஒன்றையும் அவர் இணைத்துள்ளார்.
Comments