வட்டியில்லா கடன் தருவதாக மோசடி… ரூபி ஜுவல்லர்ஸின் 5 பேர் சிக்கினர்
வட்டியில்லா நகைக் கடன் வழங்குவதாக கூறி, ஏராளமானோரை ஏமாற்றி 500 கிலோ தங்க நகைகளை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி, ஓராண்டாக போலீசாருக்கு தண்ணீ காட்டி வந்த ரூபி ஜுவல்லர்ஸை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்ற வாக்கியத்திற்கு மற்றொரு சான்றாக நடந்த இந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது செய்தி தொகுப்பு.
சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கி வந்த ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் மற்றும் பேங்கர்ஸ் என்ற நிறுவனம், இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் வட்டி இல்லா நகைக்கடன் வழங்கப்படும் என சலுகை அறிவித்திருந்தது. இதனை நம்பி, ஏராளமான இஸ்லாமியர்கள், தங்களது நகைகளை ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்து 10 ஆண்டுகளாக பணம் பெற்று வந்தனர்.
வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை, முத்தூட் பின்கார்ப் உள்ளிட்ட தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகளில் மறு அடகு வைத்து அதிக பணம் வாங்கி பல கோடிக்கு சொத்து சேர்த்து சொகுசாக வாழ்த்து வந்த ரூபி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர், 2019-ல் நிறுவனத்தை மூடிவிட்டு, திடீரென கூண்டோடு தலைமறைவாகிட்டனர். சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பிலான 500 கிலோ தங்க நகைகளையும் சுருட்டிக்கொண்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து, வியாசர்பாடியைச் சேர்ந்த உமர் அலி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
தொடர்ந்து இந்த வழக்கு, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, மோசடி பேர்வழிகளை பிடிக்க, கூடுதல் டி.ஜி.பி, ஐ.ஜி மட்டத்திலான அதிகாரிகள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ரூபி ராயல் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் சையது ரகுமான், அனிசூர் ரகுமான் மற்றும் ஊழியர்கள் ரிகானா, சஜிதா, ஷஹீனா ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை முத்தூட் பின் கார்ப் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், வங்கிகளில் அடகு வைத்து அதிக பணம் வாங்கி சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்த 500 கிலோ தங்கத்தில் 350 கிலோ தங்கம் நகைகள் பிரபல நகை அடகு கடையான முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நகைகளை அடகு வைத்து, 50 கோடி ரூபாய்க்கு மேல் அந்த கும்பல் பணம் வாங்கியுள்ளது.
கைதானவர்களிடம் விசாரணை நடத்தி, நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments