அதிரடியாக களத்தில் இறங்கிய பைடன்.. அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற உத்தரவு

0 3125

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையை நீக்கி , அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

புதிய அமெரிக்க அதிபராக ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் ஜனவரி 20 ஆம் தேதியன்று பதவி ஏற்றார். அதன் பின்,அமெரிக்க அரசியல் சூடு பிடிக்க தொடங்கியது. பதவி ஏற்ற முதல் மூன்று நாட்களிலேயே 30 முக்கிய உத்தரவுகளில் அதிரடியாக கையெழுத்திட்டார் அதிபர் பைடன் . அவற்றுள் பெரும்பாலானவை , முன்னாள் அதிபர் டிரம்ப் கொண்டு வந்த தடைகளை நீக்கும் உத்தரவுகள் ஆகும் . அவற்றுள், அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இணைவது, இஸ்லாமியர்கள் அமெரிக்கா வர விதிக்கப்பட்ட தடையை நீக்குவது போன்றவை மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டது.

இந்த வரிசையில், தற்போது மூன்றாம் பாலினத்தவர்கள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார் அதிபர் ஜோ பைடன்.

2016 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா , மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர வழிவகை செய்தார் . ஒபாமாவின் இந்த உத்தரவை பின்னர் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் நீக்கினார். அதன்படி, அமெரிக்க ராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பணி புரியலாம் ஆனால் இராணுவத்தில் புதிதாக மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதற்கு தடைவிதிக்கப்பட்டது.

தற்போது இந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க இராணுவத்தில் சேவை செய்யத் தகுதியுள்ள அனைவரும் ராணுவத்தில் சேரலாம். தகுதியுள்ள அனைவரும் ,வெளிப்படையாகவும் பெருமையுடனும் சேவை செய்யும்போது அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும், அதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பைடன் கூறினார் .

ஜோ பைடனின் இந்த நடவடிக்கையை , அமெரிக்காவில் உள்ள மூன்றாம் பாலின மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். இது தங்களுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments