சென்னையில் 72-வது குடியரசு தின விழா: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றினார்

0 2004

குடியரசு நாள் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார். 

தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. காலை 8 மணியளவில் ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

பின்னர் முப்படை வீரர்கள், காவல் துறையினர் மற்றும் பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். 

வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், 4 பேருக்கு வழங்கப்பட்டது. அரசு ஊழியர் பிரிவில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த, புலிவலம் அரசு உயர்நிலைப் பள்ளி உதவி ஆசிரியர் பா.முல்லைக்கு வழங்கப்பட்டது. 

இதேபோல, ஓசூர் வனச்சரக கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷுக்கு, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் பிரிவில், நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் தனியார் வாடகை வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் புகழேந்திரனுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. 

மதநல்லிணக்கத்தை பேணி, சமூகப் பணிகளை செய்துவரும் கோவை குனியமுத்தூர் கே.ஏ.அப்துல் ஜப்பாருக்கு, கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 

விருதுநகர் மாவட்டம் வடக்கு திருவில்லிபுத்தூரை சேர்ந்த செல்வகுமாருக்கு, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தித் திறன் பெற்றதற்காக, நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது வழங்கப்பட்டது. 

ஈரோடு துல்லிய பண்ணைய உற்பத்தியாளர் குழுமம், வெள்ளியங்கிரி உழவன் உற்த்தியாளர் குழுமம் ஆகியவற்றிற்கு ஆளுமையில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கான விருது வழங்கப்பட்டது. 

தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் குழுமம், விருதை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுமம் ஆகியவற்றிற்கு வர்த்தகத்தில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கான விருது வழங்கப்பட்டது. 

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தகுந்த பணிபுரிந்த காவலர்களுக்கு வழங்கப்படும் காந்தியடிகள் பதக்கம், காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி, காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜூ, தலைமைக் காவலர் சண்முகநாதன், தலைமைக் காவலர் ராஜசேகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 

முதலிடம் பிடித்த சேலம் நகர காவல்நிலையம், இரண்டாவது இடத்தை பிடித்த திருவண்ணாமலை நகர காவல் நிலையம், மூன்றாவது இடத்தைப் பிடித்த சென்னை ஜே4 கோட்டூர்புரம் காவல்நிலையம் ஆகியவற்றிற்கு முதலமைச்சரின் சிறந்த காவல்நிலையத்திற்கான கோப்பைகள் வழங்கப்பட்டன. 

பதக்கம், விருது, கோப்பைகளை வழங்கி, பாராட்டு பெற்றவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள் சாகசம் நடத்தப்பட்டது. 

தென்னக பண்பாட்டு மையம், செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. நாட்டுப் பண்ணுடன் குடியரசு தின விழா நிகழ்ச்சி நிறைவடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments