வங்கி லாக்கர் அறைக்குள் முன்னாள் தாசில்தார்... திடீரென்று பூட்டிய கதவு ! உயிரை காப்பாற்றிய செல்போன்
வங்கி லாக்கர் அறைக்குள் சிக்கிக் கொண்ட ஓய்வு பெற்ற தாசில்தார் கையில் செல்போன் இருந்ததால், அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருச்சி கே.கே நகரை சேர்ந்த ஒய்வு பெற்ற தாசில்தாரரரான வேணுகோபால் கடந்த வெள்ளிக்கிழமை ஜங்ஷன் அருகிலுள்ள கார்ப்பரேசன் வங்கியில் உள்ள தனது லாக்கரை பார்க்க சென்றிருந்தார். தலைமை கேசியரிடம் உள்ள ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டுள்ளார். தொடர்ந்து, தலைமை கேசியர் அவருடன் சென்று லாக்கர் ரூமை திறந்து , அவரின் லாக்கரையும் திறந்து விட்டு சென்று விட்டார்.
லாக்கரை ஆப்பரேட் செய்து பார்த்த பிறகு, திரும்ப வெளியே வர முயன்ற போது லாக்கர் ரூமின் கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தடிமனான கதவை வேணுகோபால் ஓங்கி தட்டி பார்த்தும் பயனில்லை. அதிர்ஷ்டவசமாக அந்த அறையில் லேசாக செல்போன் டவர் கிடைத்துள்ளது. செல்போனில் இருந்து வங்கியின் போனுக்குதொடர்பு கொண்டு நிலைமையை வேணு கோபால் விளக்கி உள்ளார். அதிர்ச்சியடைந்த ,வங்கி ஊழியர்கள் உடனடியாக சென்று லாக்கர் இருந்த அறையின் கதவை திறந்து அவரை மீட்டனர்.
லாக்கர் ரூமிற்குள் செல்போன் எடுத்து சென்றிருந்ததால் வேணுகோபால் உயிர் தப்பினார். இல்லையென்றால், தொடர்ந்து சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை . எனவே, காற்று கூட புக முடியாத அறையில் அவர் மாட்டிக்கொண்டிருந்தால் மூச்சு திணறி துடிதுடித்து பலியாகியிருப்பார் என்று சொல்லப்படுகிறது. லாக்கர் ரூமிற்குள் ஒரு வாடிக்கையாளர் இருப்பதை கூட மறந்து பூட்டிய ஊழியரின் பொறுப்பற்ற தன்மையால் அநியாயமாக உயிர் போயிருக்கும்.
இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு வங்கி நிர்வாகம் மனித உயிர் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் . இந்த சம்பவம் குறித்து வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு வேணுகோபால் புகார் அனுப்பியுள்ளார்.
Comments