முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கு - குற்றவாளியை கைது செய்ய மூன்று வார அவகாசம்

0 4800

வட மாநிலத்தில் பதுங்கியுள்ள பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த ஜெயில்தர் சிங்கை கைது செய்ய காவல்துறைக்கு 3 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 2005ஆம் ஆண்டில் அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.சுதர்சனம் வீட்டுக்குள் நுழைந்த வட நாட்டு கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரை கொலை செய்தனர். அவரது குடும்பத்தினரை தாக்கி படுகாயமடையச் செய்து, 63 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். வழக்கை விசாரித்த போலீசார், 32 பேர் மீது வழக்கு பதிந்ததில் 23 பேர் தலைமறைவாகிவிடவே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் பவாரியா மற்றும் அவரது சகோதரர் ஜெகதீஸ் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

இதில் ஓம்பிரகாஷ் பவாரியா சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டார். அவரது சகோதரர் ஜெகதீஷ் 2005 ஆம் ஆண்டிலிருந்து விசாரணை கைதியாக புழல் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஜெகதீஷ் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், 3 வாரம் அவகாசம் வழங்கினால் அவரை தலைமறைவாக உள்ள ஜெயில்தர்சிங்கை கைது செய்வது தொடர்பாகவோ, மீதமுள்ளவர்களை வைத்து வழக்கை முடித்து வைப்பது தொடர்பாகவோ காவல்துறையின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என எடுத்துரைத்தார்.

காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், வடமாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி ஜெயில்தர் சிங்கை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்

அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மூன்று வாரத்திற்குள் ஜெயில்தர் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டதோடு, ஜெகதீஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 15 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments