மைனஸ் 50 டிகிரி வெப்பநிலையிலும் வெடிக்கும் போராட்டம்... நவால்னியை விடுவிக்க ரஷ்யர்கள் கோரிக்கை!
ரஷ்ய எதிர் கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியான சைபீரியாவின் உறைந்துபோன தெருக்களிலிருந்து மாஸ்கோவின் செயின்ட் பீட்டர் ஸ்பர்க்கின் பிரமாண்ட தெருக்கள் வரை, பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரஷ்ய போலீசார் நவால்னியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோரைக் கைது செய்து வருவதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தீவிரமாக எதிர்த்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 - ம் தேதி நோவிசோக் எனப்படும் கடுமையான விஷத் தாக்குதலுக்கு ஆளாகி, கோமா நிலைக்குச் சென்றார். மருத்துவர்களின் பல மாத சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த நவால்னி, எனக்கு விஷம் கொடுக்கப்பட்டதில் ரஷ்ய அதிபர் புதினின் பங்கு இருக்கிறது என்றும், தான் ரஷ்யா திரும்புவதைத் தடுக்க புடின் பல்வேறு முயற்சிகளை எடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தத் தகவலை ரஷ்ய அதிபர் மாளிகை உடனடியாக மறுத்திருந்தது.
இந்த நிலையில், ஜனவரி 17 - ம் தேதி ஜெர்மனியிலிருந்து அலெக்ஸி நவால்னி ரஷ்யா திரும்பினார். நன்கொடையாக வந்த சுமார் 40 லட்சம் டாலர் மதிப்பிலான தொகையை தன் சொந்த செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொண்டார் என்றும் டிசம்பர் மாத விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறி, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவால்னியை விடுவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஜப்பானின் வடக்கே உள்ள தீவு நகரமான யுஷ்னோ-சகாலின்ஸ்க் முதல் கிழக்கு சைபீரிய நகரமான யாகுட்ஸ்க் வரை, மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் தெருக்களின் நின்று நவால்னிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகிறார்கள். போராட்டக்காரர்கள், ‘வெட்கம்’ ‘கொள்ளைக்காரர்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டம் நடத்துகிறார்கள்.
குளிர்காலம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் இருந்தபோதிலும், நவால்னியை விடுவிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக நவால்னியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது .போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
“நவால்னியின் சட்ட விரோதக் கைதால், ரஷ்யாவில் நிலைமை மேலும் மேலும் மோசமடைந்து வருகிறது. நவால்னி விடுதலை வரை ஓயமாட்டோம்” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments