ரூ.7 கோடி நகை கொள்ளை.. 18 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை 18 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட 7 பேரிடம் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும் மீட்கப்பட்டன.
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை புகுந்த 6 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி ஊழியர்களை கட்டிப் போட்டுவிட்டு 7 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், 96 ஆயிரம் ரூபாயுடன் தப்பியது. கொள்ளை சம்பவமும் இருசக்கர வாகனத்தில் பெரிய அளவிலான பைகளில், கொள்ளையடித்த நகைகளை கொண்டு செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன.
10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அசுர வேகத்தில் விசாரணை தொடங்கி நடந்தது. நிதி நிறுவன மேலாளரிடமிருந்து கொள்ளையர்கள் பறித்துச் சென்ற செல்போன் சிக்னலை பின் தொடர்ந்த போலீசார், தெலுங்கானா வழியாக அவர்கள் வடமாநிலம் நோக்கிச் செல்வதை கண்டறிந்தனர். உடனடியாக தெலுங்கானா மாநில போலீசாரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க, உஷாரான அவர்கள், தீவிர வாகன சோதனையில் இறங்கினர்.
அதன் பலனாக காரில் சென்று கொண்டிருந்த ஐந்து பேர், கண்டெய்னர் லாரி ஒன்றில் நகைகளுடன் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் என 7 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 கிலோ தங்க ஆபரணங்கள், 96 ஆயிரம் ரூபாய், ஏழு கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்கள்,கார், கண்டெய்னர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இரு மாநில போலீசாரும் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சிகள், சரியான முறையில் நடைபெற்ற தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் காரணமாகவே குறைந்த நேரத்தில் கொள்ளையர்களை பிடிக்க முடிந்தது என ஐதராபாத் காவல் ஆணையர் சஞ்சனார் தெரிவித்தார். இந்தக் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களுக்கு வேறு யார் யாரெல்லாம் உதவி செய்திருக்கிறார்கள் என்ற விசாரணையை தமிழக போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
Comments