யானையை கொன்ற மனித மிருகங்கள்... தண்டிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்
மனித தன்மையற்ற முறையில், காட்டு யானையை கொன்ற கொடூர மனம் படைத்த மனித மிருகங்களை, விரைந்து தண்டிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 234 தொகுதிகளுக்கும்,நேரில் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு ஊராட்சியில், திமுகவின் மக்கள் கிராம சபை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆண்களை காட்டிலும், பெண்கள் அதிகளவில், தனிநபர் இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
திண்ணை பிரச்சாரங்கள் மூலம், தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்த திமுகவின் வெற்றி, மக்கள் கிராம சபை கூட்டங்கள் மூலம் தொடர்ந்து கொண்டிருப்பதாக, மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில், திமுகவின் வெற்றிக்கு, மக்கள் கிராம சபை கூட்டங்கள் பேருதவி புரிந்ததாக, மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மனித தன்மையற்ற முறையில், காட்டு யானையை கொன்ற கொடூர மனம் படைத்த மனித மிருகங்களை, விரைந்து தண்டிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும், நேரில் சென்று, தேர்தல் பரப்புரையில் ஈடுபட போவதாக கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதற்கான பயணத் திட்டம் குறித்து, வருகிற 25ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.
Comments